Published : 27 Apr 2020 01:42 PM
Last Updated : 27 Apr 2020 01:42 PM
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் முதல் கட்ட ஆய்வில் கரோனா இருப்பதாக அறியப்பட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு சென்னையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வு முடிவில் கரோனா அறிகுறி இல்லை என்று உறுதியாகி உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராயக்கோட்டை சாலை சந்திப்பு மேம்பாலம் அருகே அலசநத்தம் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்குக் கடந்த மாதம் கரோனா அறிகுறி உறுதியானதால், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்துத் தொழிலாளர்களையும் நிறுவனத்தினர் வீட்டுக்கு அனுப்பினர். அத்துடன், அனைத்து ஊழியர்களும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். அதன்படி கடந்த மாதம் மார்ச் 21-ம் தேதி ஓசூருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
அதன் பிறகு 34 நாட்கள் முடிந்த நிலையில் ஏப்ரல் 24-ம் தேதியன்று ஓசூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டார். அங்கு நடத்தப்பட்ட முதல் கட்டப் பரிசோதனையில் அவருக்குக் கரோனா அறிகுறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஓசூரில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியருக்கு முதல் கட்ட ஆய்வில் கரோனா அறிகுறி உறுதியான தகவல் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியவரும். அல்லது அதிகபட்சமாக 28 நாட்களுக்குள் தெரியவரும்.
இதில் 34 நாட்களைக் கடந்து எந்தவிதமான அறிகுறியும் இல்லாத ஒருவருக்கு எப்படி பாசிட்டிவ் என்று உறுதியானது என குழப்பமடைந்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த தனியார் நிறுவன ஊழியரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தனியார் ஊழியரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தம், சளி மாதிரிகள் இரண்டாம் கட்ட ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் ஓசூர் அரசு மருத்துவமனையில் முதல் கட்ட ஆய்வுக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டாம் கட்டப் பரிசோதனை முடிவு வெளியானதில் அலசநத்தம் தனியார் ஊழியருக்குக் கரோனா இல்லை என்று உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறுகையில், ''ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த தனியார் ஊழியருக்குக் கரோனா அறிகுறி இருப்பதாக வந்த முதல்கட்ட ஆய்வு முடிவைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கரோனா அறிகுறி இல்லை என உறுதியாகி உள்ளது'' என்றார்.
மூன்றாம் கட்ட ஆய்வு
இதனிடையே அலசநத்தம் குடியிருப்புப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்குள் யாரும் வந்து செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''அலசநத்தம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியருக்கு மூன்றாம் கட்ட ஆய்வு முடிவு வரவேண்டி உள்ளது. அதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதி மக்களுக்குத் தேவையான பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வருவாய்த்துறை மூலமாக குழுக்கள் அமைத்து வீடுகளுக்கு வழங்கும் பணி நடைபெறுகிறது.
மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக கிருமிநாசினி தெளிப்புப் பணிகளும், மருத்துவக் குழுவினர் மூலமாக வீடு வீடாகச் சென்று காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியும் நடைபெறுகிறது. அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனை செய்து ரத்த, சளி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளும் தொடர்ந்து நடைபெறும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT