Published : 27 Apr 2020 09:56 AM
Last Updated : 27 Apr 2020 09:56 AM
ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க நிர்பந்திக்கக் கூடாது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஏப்.27) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பாதிப்பு வீரியம் குறையாமல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகள் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 4 நாட்களும்,சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 28 ஆம் தேதி வரை 3 நாட்களும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அரசின் திடீர் அறிவிப்பால். பல இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதிய காட்சிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
கரோனா நோய்த் தொற்று வெகு வேகமாக பரவுவதற்கு மக்கள் கூட்டம் வழி வகுத்துவிடும். அதனை உணர்ந்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல், அரசு நிர்வாகம் இருந்தது ஏன்?
தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம்தான் சமூக பரவல் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும். நேற்று வரை 79 ஆயிரத்து 586 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு ஆராய வேண்டும்.
கரோனா பரிசோதனைக்குத் தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகள் எடுப்பதற்கு இஎன்டி மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்புப் பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் விதிமுறைகளை வகுத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விதிமுறைகளை மீறி ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்கள் மாதிரிகளை எடுப்பதற்கு வற்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது.
ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்கள் மாதிரிகளை எடுப்பதைத் தடைசெய்து, மருத்துவர்களை ஈடுபடுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பட்டயப்படிப்பு மட்டுமே முடித்துள்ள ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்கள், மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை அளிக்கும் பணியை மட்டுமே மேற்கொள்ள முடியும். கரோனா சிகிச்சை மையங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆய்வக தொழில்நுட்பப் பணியாளர்களை கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க நிர்பந்திக்கக் கூடாது" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT