Published : 26 Apr 2020 08:42 PM
Last Updated : 26 Apr 2020 08:42 PM

'GO CORONA GO'; தமிழக காவல்துறை நடத்தும் பெண்கள் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஓவியம், கோலப் போட்டி: மாவட்ட வாரியாகப் பரிசு

தமிழக காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சார்பில் ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஓவியம் மற்றும் கோலப்போட்டி ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.

இந்தப் போட்டிகளில் 4 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கான போட்டியில் 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரண்டு பிரிவுகள் உள்ளன. ஓவியப்போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஏ-4 சைஸ் அட்டையில் ஓவியம் வரைந்து அதைப் புகைப்படம் எடுத்து அதற்கென உள்ள மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இதில் ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்கான ரங்கோலி அல்லது கோலப் போட்டியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். 3 அடிக்கு 3 அடி கொண்ட ரங்கோலி, கோலப் போட்டி இது. வீட்டுக்குள் மட்டுமே கோலத்தைப் போட்டு படம் எடுத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 வெற்றியாளர்களுக்குப் பரிசு அளிக்கப்படும்.

போட்டிக்கான கடைசித் தேதி மே.3 , 2020. போட்டிக்கான படங்களை TNPolice.rangolicontest@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். உடன் பெயர், வயது, தொடர்பு எண், முகவரி, மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும். தனிப்பட்ட போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரே கட்டமாகத்தான் தேர்வு நடக்கும். போட்டி குறித்த சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள: 97909 68326, 95000 98733 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகள் பங்கேற்கும் போட்டியில் பெற்றோர் பெயர், பங்கேற்கும் குழந்தையின் பெயரை இணைத்து அனுப்ப வேண்டும். வென்ற போட்டியாளர்களுக்குப் பரிசுப் பொருள் வீடு தேடி வரும்.

போட்டியின் நிபந்தனை 'GO CORONA GO' எனும் கருப்பொருளில் நடக்கும் போட்டி ஆகும். போட்டிக்கு அனுப்பும் படங்கள், ரங்கோலி மற்றும் கோலப்படங்கள்

*கருப்பொருளின் ஆழம் மற்றும் அடிப்படையுடன் படம் இருக்க வேண்டும்.

* விரிவாகவும் & முழுமையாகவும் இருக்க வேண்டும்

* வண்ணக்கலவை மற்றும் கோரும் விஷயம் சரியாக இருக்க வேண்டும்.

* படைப்பாற்றல் மற்றும் புதுமையுடன் இருக்க வேண்டும்.

இதுகுறித்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்ததாவது:

“தமிழக காவல்துறையினர் ஊரடங்கு நேரத்தில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பொதுமக்களும் தங்களுடைய ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் தமிழக காவல்துறை சார்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓவியப் போட்டி வைத்துள்ளோம்.

இந்தப் போட்டியில் 4 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்துகொள்ளலாம். அதில் 4 முதல் 10 வயது வரை, 11 முதல் 16 வயது வரை என இரு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுகளுக்கும் ஓவியப்போட்டி நடைபெறும். இதில் ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் 20 பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்கு ரங்கோலி அல்லது கோலப்போட்டி நடைபெறும். அனைத்து வயதுப் பெண்களும் இதில் பங்கேற்கலாம். வீட்டுக்குள் மட்டுமே கோலத்தைப் போட்டு படம் எடுத்து அனுப்ப வேண்டும். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 வெற்றியாளர்களுக்குப் பரிசு அளிக்கப்படும்”.

இவ்வாறு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x