Published : 26 Apr 2020 08:27 PM
Last Updated : 26 Apr 2020 08:27 PM
புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்துக்கு அனுமதியோடு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி இன்று(ஏப் 26) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பாதிப்புக்குள்ளான 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நலம் சீராக இருக்கிறது. நேற்று (ஏப் 25) மருத்துவத்துறை அதிகாரிகள் 17 பேரின் உமிழ்நீர் மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் எப்படி இருக்கிறது, மாநில அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார். நானும் தெள்ளத்தெளிவாகக் கூறினேன்.
காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கரோனா தொற்று எதுவும் இல்லை. புதுச்சேரியில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில அரசின் சார்பில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். மாநில எல்லைகளை மூடி வெளிமாநிலத்தினர் உள்ளே வராத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்களின் அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் பாடுபடுகின்றனர். நானும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
அதனால் தான் அருகிலுள்ள தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு பெரிய அளவில் இருந்தாலும் கூட புதுச்சேரி மாநிலத்தில் எங்களால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது என்று குடியரசு துணைத் தலைவரிடம் கூறினேன். அவரும் உங்களுடைய பணியை நான் பாராட்டுகிறேன் என்று கூறினார்.
இன்று (ஏப் 26) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தேன். மேலும், மாநிலத்தில் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு மாநில அரசு பணிபுரிகின்ற சமயத்தில் தேவையின்றி, எந்தவித அதிகாரமும் இல்லாமல் துணைநிலை ஆளுநர் தலையிட்டு அதிகாரிகளுக்கு மறு உத்தரவைப் போட்டு நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அதற்கு நீங்கள் முடிவு காண வேண்டும் என்று அமித் ஷாவிடம் கூறினேன். அவரும் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புக்காக 100 நாள் வேலைத் திட்டம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தினமும் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோடைகாலமான தற்போது வெயில் அதிகம் இருக்கும் என்பதால் பணி நேரத்தை ஏற்கெனவே இருந்த 9 மணியில் இருந்து குறைத்து காலை 7.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரையும், பிற்பகல் 3 மணியில் இருந்து 5 மணி வரை என்றும் மாற்றிப் பணிபுரிய ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
வங்கி மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் தர ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கான வட்டியை அரசு ஏற்கும். முதல் மாதத்தில் ரூ.5 ஆயிரம், அடுத்த மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் படிப்படியாகத் தொழில் செய்ய பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஊரடங்கு அமலில் இருக்கும் இந்நேரத்தில் தேவையில்லாமல் வெளிமாநிலத்துக்குச் செல்வதைத் தடுக்கவும், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களைத் தடுக்கவும் முடிவு எடுத்துள்ளோம். அதன்படி புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்துக்கு அனுமதியோடு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இதன் மூலம் பெரும்பாலான மக்கள் வெளியே செல்வதைத் தடுக்க முடியும். புதுச்சேரி மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தனிமையாக இருக்க வேண்டும். பொருட்களை ஒவ்வொருவராக, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துச் சென்று வாங்க வேண்டும். புதுச்சேரியில் கரோனா குறைந்துள்ளதற்குக் காரணம் கட்டுப்பாடுகள்தான். எனவே அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களும், வேலைக்காகச் சென்றுள்ளவர்களும் புதுச்சேரி திரும்ப கோரிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல் புதுச்சேரியில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களும் தங்கள் மாநிலத்துக்குச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் செல்ல ரயில்கள் இயக்க, வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள், தொழிலாளர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற கோரிக்கைகள் பல மாநிலங்களிலும் உள்ளது''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment