Published : 26 Apr 2020 06:43 PM
Last Updated : 26 Apr 2020 06:43 PM
‘‘கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் எனும் எமன், இன்று அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. உலக அளவில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சில ஆயிரம் பேர் மடிந்து வருகின்றனர். ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் நிலைமை கைமீறிச் சென்றுள்ள நிலையில், இந்தியா உட்பட குறிப்பிட்ட சில நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்து , கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பிரதமர் மோடி அவர்கள் அதிதீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால், பிரதமர் மோடி அவர்களின் அறிவிப்புப்படி நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில், கரோனா பரவும் வேகம் ஒரளவு கட்டுப்பட்டுள்ளது. கரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை தற்போது ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக, மத்திய அரசு அண்மையில் ‘ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது. 11 மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி, ஒருவர் வசிக்கும் இடத்தின் அருகே கரோனா வைரஸ் தொற்றுள்ள பகுதிகளை சுட்டிக் காட்டும். பாதிப்புள்ள இடத்தின் தொலைவை செயலி துல்லியமாக காட்டும். கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்த அறிவுரைகளும் செயலி மூலம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து, இரவும் பகலுமாக கரோனா ஒழிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் இந்தியாவில் கரோனா பரவும் வேகமும் கணிசமாக குறைந்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகளும் பாராட்டி வருகின்றன.
பில்கேட்ஸ் போன்றவர்களும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஒருபுறம் பொதுசுகாதாரத்தை பேணி கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பொருளாதார ரீதியாக சமூகத்தில்பின்தங்கியுள்ளவர்களின் நலனில் அக்கறையுடன் பிரதமர் மோடி செயல்படுவதாக பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையும் தாண்டி கரோனா பரவல் என்பது ,பல காரணங்களால் அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு அறிவித்துள்ள சமூகவிலகலை கடைபிடிக்காமல் சிலர் விதிமுறைகளை மீறி செயல்படுவது முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை கரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தாக்கத்தின் தீவிரவாதத்தை தொடர்ந்து , சென்னை முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ,மாநகரம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பைக் மற்றும் கார்களில் வெளியே சுற்றித்தான் வருகின்றனர். இதனால் கரோனா தொற்று அதிகளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களும், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 3 நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுத்து விட்டால் ஊரடங்கு முடியும் போது, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். எனவே தமிழகத்திலிருந்து கொரோனாவை விரட்டுவதில் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால், இனி புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது தான்.
எனவே அனைவரும் ஊரடங்கை மதித்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்; தேவையின்றி வெளியில் வரக்கூடாது. கொரோனாவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சமூகப் பொறுப்பின்றி, ஊரடங்கை மீறி மக்கள் வெளியே வந்தால் அது கொரோனா ஒழிப்பு என்ற நமது லட்சியத்தை பாழாக்கி விடும்.
தமிழக மக்கள் இதுவரை வழங்கிய ஒத்துழைப்பை காட்டிலும் வரும் காலங்களில் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கை சில நாட்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட்டால் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் நாம் கரோனாவை இந்திய தேசத்தை விட்டே விரட்ட முடியும். இந்த உறுதியை ஒவ்வொருவரும் ஏற்போம். நமது வெற்றியை உலகம் கண்டு வியக்கட்டும்.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT