Last Updated : 26 Apr, 2020 05:09 PM

 

Published : 26 Apr 2020 05:09 PM
Last Updated : 26 Apr 2020 05:09 PM

அரியவகை ரத்தம் கிடைக்காமல் பிரசவத்தில் தவித்த பெண்; உதவிய புதுச்சேரி காவலர், இளைஞருக்குக் குவியும் பாராட்டு

ரத்தம் கிடைக்க உதவிய காவலர் செல்வம், ரத்த தானம் வழங்கிய இளைஞர் சந்தோஷ். 

புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் அரிதான வகை ரத்தமான பாம்பே ஓ குரூப் ரத்த வகை கிடைக்காமல் தவித்த நிலையில், அவருக்கு உதவிய புதுச்சேரி காவலர் மற்றும் இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈய்யனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி (25). இவர் பாம்பே ஓ குரூப்(எச்எச் பிரிவு) என்ற அரிதான வகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர். நிறைமாதக் கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஜயலட்சுமிக்கு ரத்தம் குறைவாக உள்ளதால், பாம்பே ஓ குரூப் ரத்த வகையை ஏற்பாடு செய்யும்படி, அவரது தாய் அலமேலுவிடம் கூறியுள்ளனர். இதையறிந்து செய்வதறியாது தவித்த அலமேலு, மருத்துவமனை வளாகத்திலிருந்த பொதுமக்களிடம் தன் மகளைக் காப்பாற்ற வேண்டி கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்ட அங்கிருந்த புதுச்சேரி ஆயுதப்படை காவலர் செல்வம், உயிர்த்துளி ரத்ததான அமைப்பினைத் தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து அந்த அமைப்பின் தன்னார்வலர் சந்தோஷ் (25) உயிர்த்துளி வாகனத்தில் ஜிப்மர் ரத்த வங்கிக்கு வந்து, பாம்பே வகை ரத்தத்தை தானமாக வழங்கினார். தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தகவலையறிந்த விஜயலட்சுமியின் தாய் அலமேலு கண்ணீருடன், ரத்த் தானம் வழங்கிய சந்தோஷுக்கும், உதவிய ஆயுதப்படை காவலர் செல்வத்துக்கும் நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக காவலர் செல்வத்திடம் கேட்டபோது,‘‘ஜிப்மரில் பிரசவத்துக்காக எனது அண்ணியைச் சேர்த்துள்ளோம். அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால், நான் விடுமுறை எடுத்து அவருக்கு உதவியாக இருக்க அங்கு இருந்தேன். அப்போது வயதான பெண் ஒருவர் தன்னுடைய மகளுக்கு ரத்தம் தேவைப்படுவதாக கண்ணீருடன் அனைவரையும் கேட்டுக்கொண்டிருந்தார். அதனைக் கண்ட நான் அவரிடம் விசாரித்தேன். அப்போது, பாம்பே ஓ ரத்த வகை தேவைப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து வாட்ஸ் அப் மூலம் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்தேன். அதோடு பலரைத் தொடர்புகொண்டு கேட்டேன். இறுதியாக எனது நண்பர் ஒருவர் புதுச்சேரி தன்னார்வ ரத்த அமைப்பு ஒன்றின் தொடர்பு எண்ணைக் கொடுத்தார். அதன் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தேன். பிறகு அந்த தன்னார்வ ரத்த அமைப்பின் உதவி மூலம் புதுச்சேரியில் சந்தோஷ் என்ற நபருக்கு இருப்பது கண்டறியப்பட்டு, அவரின் உதவி மூலம் தாயையும், குழந்தையையும் காப்பற்ற முடிந்தது. இது எனக்குக் கிடைத்த பாக்கியம்," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரத்த தானம் வழங்கிய இளைஞர் சந்தோஷ் கூறும்போது,‘‘ரத்தம் வேண்டும் என செல்போனில் நேற்று தொடர்புகொண்டு கேட்டனர். தொடர்ந்து நான் அங்கு சென்று, நாள் முழுவதும் காத்திருந்து, நேற்று (ஏப் 25) காலை ரத்தம் வழங்கினேன். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்’’என்றார்.

ஆபத்தான நேரத்தில் பெண்ணுக்கு அரிய வகை ரத்தம் கிடைக்க உதவிய காவலர், மற்றும் ரத்தம் வழங்கிய இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x