ஊரடங்கால் விற்க முடியாமல் குப்பையில் கொட்டப்பட்ட 5,000 கிலோ காளான்: ரூ.8 லட்சம் நஷ்டம்

ஊரடங்கால் விற்க முடியாமல் குப்பையில் கொட்டப்பட்ட 5,000 கிலோ காளான்: ரூ.8 லட்சம் நஷ்டம்
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தல் காளானையும் விட்டுவவைக்கவில்லை. ஊரடங்கால் விற்க முடியாமல் 5,000 கிலோ காளான் குப்பையில் கொட்டப்பட்டது. இதனால் ரூ.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களை உரிய நேரத்தில் விற்க முடியாமல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.

புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் காளான் பண்ணையில் உற்பத்தியும், சுயதொழில் தொடங்குவோருக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். காளான் வளர்க்கப் பயிற்சி பெற்று பலரும் சொந்தக் காலில் நிற்கின்றனர்.இங்கு உற்பத்தியாகும் காளான்களுக்கு புதுச்சேரி, தமிழகத்தில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காளானையும் விட்டுவைக்கவில்லை.

இது தொடர்பாக காளான் உற்பத்தி பயிற்சி மற்றும் விற்பனை செய்து வரும் முன்னாள் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி கூறுகையில், "கரோனா வைரஸ் காரணமாக காளானை விற்க முடியாமல் பாதிப்பு உண்டானது. பலரும் தமிழகம், புதுச்சேரியில் இங்கு வாங்குவது வழக்கம். கொண்டு செல்லவும் முடியவில்லை. வாங்கவும் வரமுடியவில்லை. காளானை சூப் செய்து கரோனா பணியில் ஈடுபடும் போலீஸார், மருத்துவப் பணியாளர்களுக்குத் தரத் தொடங்கினேன். பிறகு காளான் பிரியாணி தந்தோம். தொடர்ந்து செய்ய முடியவில்லை.

இங்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 கிலோ வரை உற்பத்தி செய்யப்படும் காளான்கள் பண்ணையிலேயே கருகி அழுகிப் போய் குப்பையில்தான் கொட்டுகிறோம். காளான் விதைகளை உற்பத்தி செய்கிறோம். இவ்விதைகளை ஒரு மாதம் மட்டுமே பாதுகாக்க முடியும். உற்பத்தி செய்துள்ள 350 பாக்கெட் விதைகளால் 3,500 கிலோ காளான்களை உற்பத்தி செய்திருக்க முடியும். மொத்தமாக 5,000 கிலோ வரை குப்பையில் கொட்டிவிட்டோம். ரூ. 8 லட்சம் வரை நஷ்டமாகிவிட்டது. உணவுப் பொருட்களும் வீணாகிவிட்டதுதான் கவலையாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in