Published : 26 Apr 2020 12:53 PM
Last Updated : 26 Apr 2020 12:53 PM

விவசாயிகள் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளைக் களைய அரசின் சலுகைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகள் விளைபொருட்களை எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளைக் களையும் வண்ணம் சேமிப்புக் கிடங்கு வாடகை ரத்து, பொருளீட்டு கடன் வசதி உள்ளிட்ட சலுகைகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தில் கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளைக் களைந்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விளைபொருட்களைப் பாதுகாத்து சேமித்திட கிடங்கு வசதி

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பயன்பாட்டிற்காக நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை பயன்பாட்டில் இருந்து வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை வைத்துப் பாதுகாத்திடலாம்.

அதிக விலை கிடைக்கப்பெறும் காலங்களில் விளைபொருட்களை கிடங்கிலிருந்து எடுத்து விற்பனை செய்திட, கிடங்கு வாடகைக் கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்திடத் தேவையில்லை என அரசு ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

பொருளீட்டுக்கடன் வசதி

கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களை அடமானத்தின்பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது 3 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்த அளவிற்கு பொருளீட்டுக் கடனைப் பெற்றிடலாம். கடனுக்கான கால அளவு 180 நாட்கள் ஆகும். இதற்கான வட்டி 5 சதவீதமாகும். கடனுக்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்திடத் தேவையில்லை என ஆணையிடப்பட்டிருந்தது. அது மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து

பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைத்திடவும், அவற்றைப் பாதுகாத்து, தேவைப்படும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதனக் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இக்கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேமித்து வைக்க விவசாயிகளிடமிருந்து பயன்பாட்டுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றது.

தற்போதுள்ள சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டும், மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும், விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும். இப்பயன்பாட்டுக் கட்டணத் தொகை ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படமாட்டாது என்றும், இக்கட்டணத்தை முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

சந்தைக் கட்டண விலக்கு

தற்போது நெல், சிறு தானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், புளி, முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடமிருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை நியாயமான விலையில், பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட ஏதுவாக, தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்தை ஏப்ரல் 30 வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சலுகை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x