Published : 26 Apr 2020 12:29 PM
Last Updated : 26 Apr 2020 12:29 PM
தமிழகத்தில் 104 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டதற்கு வேதனை தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி, அதன் விளைவாக வாங்கி வந்த கரோனா வைரஸ் நோயை குழந்தைகளிடம் பரப்பியதன் மூலம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1,821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. ஒரு தவறும் செய்யாத குழந்தைகள் குடும்பத்தினரின் அலட்சியத்தால் கரோனா வைரஸ் நோய்க் கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 முதல் 9 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் கரோனா வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, இதுவரை 55 ஆண் குழந்தைகள், 49 பெண் குழந்தைகள் என மொத்தம் 104 குழந்தைகள் கரோனா வைரஸ் நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் பொது சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து நோய்த் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கரோனா பாதிப்புக்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது ஆகும்.
வழக்கமாக கோடைக் காலத்தில் வெயில் கொடுமையால் குழந்தைகள் சிரமப்படுவார்கள்; இப்போது கூடுதலாக கரோனா நோயையும் தாங்குவது இன்னும் அவதியாக இருக்கும். குழந்தைகளின் இந்த நிலை மிகவும் வேதனையளிக்கிறது.
குழந்தைகளின் இந்த நிலைக்கு யார் காரணம்? என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த நிலைக்கு நிச்சயம் குழந்தைகள் காரணமல்ல... அவர்கள் நிச்சயமாக ஊரடங்கை மீறி வெளியில் சுற்ற மாட்டார்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி, அதன் விளைவாக வாங்கி வந்த கரோனா வைரஸ் நோயை குடும்பத்தினரிடமும் பரப்பியதன் மூலமாகத் தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அனைவரும் ஊரடங்கை மதித்து வீட்டில் அடங்கியிருந்தாலோ, வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்திருந்தாலோ குழந்தைகளுக்கு இத்தகைய நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT