Published : 26 Apr 2020 12:02 PM
Last Updated : 26 Apr 2020 12:02 PM
பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தயங்காமல் பெண்கள் உதவி எண்கள்: 181, 1091, 122, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகாமையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
''உயிர்கொல்லி நோயான கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தி இல்லாதொழித்திட நாடு முழுவதும் 24.03.2020 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், தனித்திருக்க வேண்டும், விழிப்பாய் இருக்க வேண்டும் என தமிழக முதல்வரால் அறிவுரை வழங்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அரசுத் துறைகள் முழுவீச்சில் களப்பணியாற்றி வருகின்றன.
வீட்டில் முடங்கி கிடக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் தன்னலம் பேணி, குடும்பத்தையும் காத்து, நாட்டை நலமாய் இருக்க உதவ வேண்டிய இந்த வேளையில், குடும்ப சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக செய்திகளிலும், அரசாங்க உதவி எண்கள் 181 - பெண்கள் உதவி மையம், 1091 - காவல்துறை பெண்கள் உதவி மையம், 112 - பெண்கள் உதவி எண் மற்றும் பேரிடர் தீர்வு உதவி மையங்கள் மூலமும் மாநில மகளிர் ஆணையம், சமூக நல வாரிய உதவி மையம் மூலமாகவும் அறிய வருகிறது. இது வருந்தத்தக்க போக்காகும்.
தமிழ்நாடு அரசின் சமூக நலத் துறை, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உடனடி தேவைகளான தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு போன்ற அத்தியாவசிய தேவை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் பெண்கள், உடனடியாக பெண்கள் உதவி எண் 181, காவல் துறை உதவி எண் 1091 மற்றும் 112 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பாதுகாப்பு அலுவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக நலத் துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், இடைக்கால தங்கும் இல்லங்கள், பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் ஸ்வதார் இல்லங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, இலவச சட்ட உதவி, மன நல ஆலோசனை ஆகியவை வழங்கப்படும்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்வரை தங்கள் குழந்தைகளுடன் அங்கேயே தங்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெண்களது கண்ணியம்
மற்றும் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் தயங்காமல் பெண்கள் உதவி எண்கள் : 181, 1091, 112, மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகாமையில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை உடனடியாக தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது''.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT