Published : 26 Apr 2020 07:42 AM
Last Updated : 26 Apr 2020 07:42 AM

வங்கி கணக்கிலிருந்து ஆதார் அடிப்படையில் பணம் எடுக்கும் சேவை; கரோனாவால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அஞ்சலகம் மூலம் செயல்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

சென்னை

சென்னையில் கரோனா தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், ஏடிஎம்களில் பணம் எடுக்க வெளியில் செல்வதை தடுக்க, அஞ்சலகம் செயல்படுத்தி வரும் வங்கிக் கணக்கிலிருந்து ஆதார் மூலமாக பணம் எடுக்கும் சேவை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25-ம் தேதி நிலவரப்படி 495 ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து, நோய்த் தொற்று தடுப்பு திட்டப் பகுதியாக அறிவித்துள்ளது. அவ்வாறு சென்னையில் 150-க்கும்மேற்பட்ட பகுதிகளில் சீல் வைக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை தடுக்கஇப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள்வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் மாநகராட்சி மூலமாக,சீல் வைக்கப்பட்ட தெருமுனைக்கு கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுகிறன. 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இப்பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மிலிருந்து பணம் எடுப்பது அத்தியாவசியம் என்பதால், அதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்காமல் அனுமதித்து வருகிறது. பெரும்பாலான ஏடிஎம்களில் அடிக்கடி தொடும் இடங்கள் கிருமிநீக்கம் செய்யப்படுவதில்லை. தற்போது கரோனா தொற்றுள்ள பலருக்கு அறிகுறியே தென்படாத நிலையில், சீல் வைக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியில் வருவதாலும், ஏடிஎம் மையத்துக்கு செல்வதாலும் எளிதில் கரோனா பரவ வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில், சீல் வைக்கப்பட்ட பகுதியில் புதுச்சேரி அரசு வேண்டுகோளின்பேரில் அஞ்சல் துறையினர் நேரடியாக சென்று, ஆதார் அடிப்படையில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து கொடுத்து வருகின்றனர். இச்சேவையின் கீழ் பணம் பெற வேண்டுமெனில், முதலில் வங்கிக் கணக்கில் பணம் இருக்க வேண்டும். அந்த வங்கிக் கணக்குடன் ஆதார் மற்றும் பயன்பாட்டில் உள்ள கைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அஞ்சல் அலுவலர் தனது கைபேசியில் உள்ள மைக்ரோ ஏடிஎம் செயலி வழியாக, கைரேகை பதிவு கருவியில் பயனாளியின் கைரேகையை பதிவுசெய்வார். அப்போது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதை அஞ்சல் அலுவலரிடம் தெரிவித்தால், பயனாளியின் வங்கி கணக்கிலிருந்து ரூ.500 முதல்ரூ.10 ஆயிரம் வரை பணம் வழங்கப்படும்.

உடனே கைரேகை பதிவு கருவிகிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்த சேவையை பெற வங்கி கணக்கு எண், சேமிப்பு கணக்கு புத்தகம் எதுவும் தேவையில்லை. இவ்வாறு 873 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம்விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையிலும் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷிடம் கேட்டபோது, "நல்ல யோசனைதான். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x