Published : 26 Apr 2020 07:38 AM
Last Updated : 26 Apr 2020 07:38 AM
கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சித்த மருத்துவம் சார்ந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
கபசுரக் குடிநீர் ஒரு சித்த மருத்துவ மரபு மருந்து. சித்த மருத்துவ அடிப்படையில் சுரங்களின் வகை 64 என்கின்றது யூகி வைத்திய சிந்தாமணி எனும் நூல். அதில் ஒன்றுதான் கபசுரம். 3 (அ) 4 நாட்களில் அதைக் குணப்படுத்த இயலாது போனால், அது அபன்னியாச ஜன்னியாக மாறி, குணப்படுத்த முடியாத கடினமான நோயாகும் என்றும் அந்நூல் விவரிக்கிறது.
சித்த மருத்துவர்கள் கபசுரத்தை வைரல் நிமோனியாவுக்கு, அதை ஒட்டிய சுரத்துக்குப் பயன்படுத்தினர்.
கபசுரத்தின் அறிகுறிகளான குரல் கம்மல், இருமல், மூச்சிரைப்பு, சுரம் போன்ற குணங்கள் ’கோவிட் 19’-லும் அறிகுறிகளாக இருந்ததால், ‘‘கபசுரத்துக்குப் பயன்பட்ட மருந்தை ஏன் கோவிட் நோய்க்கு முயற்சிக்கக் கூடாது?” என சித்த மருத்துவர்கள் ஆலோசித்து சொன்ன மருந்துதான் கபசுரக் குடிநீர். ஆயுஷ் துறையின் சித்த மருத்துவ பார்மகோபியல் குழு வெளியிட்ட ‘சித்தா ஃபார்முலரி ஆஃப் இந்தியா’ நூலிலும் இந்த மருந்து செய்வழிமுறை அரசு ஆவணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுக்கு, திப்பிலி, அக்கிரகாரம், கிராம்பு, கடுக்காய், சீந்தில், கோரைக்கிழங்கு, கற்பூரவல்லி, கறிமுள்ளி, நிலவேம்பு, ஆடாதோடை, சிறுகாஞ்சொறி, வட்டத்திருப்பி, சிறுதேக்கு, கோஷ்டம் ஆகிய இந்த முலிகைகள் கொண்ட கசாயத்தின் ஒவ்வொரு தாவரமும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
கபசுரக் குடிநீரின் சிறப்பே இதன் துல்லியமான மூலிகைக் கலவையே. ‘பித்தமாய்க் காத்து’ என்பது சித்த மருத்துவ நோய்த் தடுப்பின் வழிகாட்டுதல். அந்த அடிப்படையில் பித்தத்தை சீராக்கி வைத்திருக்க உதவும் மூலிகைகளின் தொகுப்பே கபசுரக் குடிநீர். இதில் உள்ள முக்கிய கூறுகளான சுக்கு, வட்டத்திருப்பி, கடுக்காய், நிலவேம்பு, ஆடாதோடை அத்தனையும் பல்வேறு பிற வைரஸ் நோய்களுக்காக ஆய்ந்தறியப்பட்டவை. குறிப்பாக, இதில் சேர்க்கப்படும் ‘வட்டத்திருப்பி’ டெங்கு நோயின் 3 வைரஸ் பிரிவுகளில் செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிலவேம்பும் ஆடாதோடையும் இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல ஆய்வகங்களில் ஃபுளூ சுரங்கள் முதல் புற்று வரை நேர்த்தியாகப் பல நோய்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை. முந்தைய பல கொள்ளை நோய்க் காலங்களில் நம் பண்டுவர்கள் ’வெப்பேந்தி’ என பயன்படுத்திய மூலிகைதான் வட்டத்திருப்பி.
முதல்கட்ட ஆய்வு
உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய அறிவுறுத்தலில், இப்படியான மருந்தேதும் கண்டறியப்படாத இக்கட் டான கால கட்டத்தில், வழக்கமான படிப்படியான ஆய்வுகளுக்காக காத்தி ராமல், ‘மானிட்டர்டு எமெர்ஜென்ஸி யூஸ் ஆஃப் அன்ரெஜிஸ்டர்டு அண்டு
இன்வெஸ்டிகேஷனல் இன்ட்டெர்வென்ஷன்ஸ்’ என்கின்ற வழிகாட்டுதலில் ஏற்கெனவே பிற நோய்களுக்குப் பயன்பட்ட மருந்துகளை சோதனை அடிப்படையில் முயற்சிக்க வலியுறுத்துகின்றது. இந்த வழிகாட்டுதலையும் கொண்டே கபசுரக் குடிநீரைத் தமிழக அரசின் சித்த மருத்துவர்கள் குழு தேர்ந்தெடுத்துள்ளது.
இவை மட்டுமல்லாது, இன்று கணினி உதவியுடன் நடத்தப்படும் உயிரி தகவலறிதல் தொழில்நுட்பம் (பயோஇன்ஃபார்மேட்டிக்ஸ்) மூலம் நடத்தப்பட்ட ‘டாக்கிங்’ ஆய்வுகளிலும் கபசுரக் குடிநீரின் மூலக்கூறுகள் இந்த வைரஸின் ஸ்பைக் புரதத்தில் இணைந்து பணியாற்றும் முதல்கட்ட ஆய்வும் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னரே எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக மேற்படிப்பு மாணவர் ஒருவர் நடத்திய ஆய்வில் இதன் நஞ்சில்லாப் பாதுகாப்பு (எலிகளில் நடத்தப்படும் ‘அக்யூட் டாக்ஸிட்டி ஸ்டடி’) அறியப்பட்டுப் பாதுகாப்பானது என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த மூலிகைகளை மிகச் சரியாக இனங்கண்டறிந்து, தாவரவியல் அடையாளங்கள்படி, தர நிர்ணயம் செய்து, அப்படி செய்த மூலிகைகளை குறிப்பிட்ட அளவு சூரிய ஒளியில்/ நிழலில் உலர வைத்து, ஆயுஷ் துறையின் மருந்து செய் வழிகாட்டுதல்படி கசாயச் சூரணமாக தயாரிக்கப்படுகிறது. அதற்குரிய ‘ஜிஎம்பி’ சான்று பெற்ற மருந்தகங்கள் மாநில அரசின் மருந்து தயாரிப்பு உரிமை பெற்று இதனைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் முடியும்.
எப்படி விநியோகம்
கபசுரக் குடிநீரை விநியோகிக்கும் வழிகாட்டுதலையும் அரசுக்கு சித்த மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. சரியான தர நிர்ணயம் உள்ள இந்தக் குடிநீரை மாநில அரசின் தலைமை அலுவலகம் மூலம், அத்தனை மாவட்டங்களுக்கும் வழங்க வேண்டும். முதலில், நோய்த் தொற்று பெற்றவரின் தொடர்பில் இருந்த, தற்போது தடுப்பு ஒதுக்கத்தில் (குவாரண்ட்டைன் & கன்டெய்ன்மென்ட் ஸோன்) உள்ள நபர்களுக்கும், முதல் நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். பொதுவாக யார் வேண்டுமானாலும் கசாயம் காய்ச்சிக் கொடுக்கும் நிலை கூடாது. அரசு சித்த மருத்துவ அலுவலர் அனுமதியின்றிப் பொது விநியோகம் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கசாயம் பெறுவோருடைய அத்தனை விவரமும் கணினிச் செயலி மூலம் மத்திய சித்த மருத்துவ கவுன்சில் வழிநடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கபசுரக் குடிநீர் அல்லாது, நிலவேம்புக் குடிநீரும் தமிழக அரசின் நோய்க் காப்புத் திட்டமான ‘ஆரோக்கியம்’ திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாது நோய் சிகிச்சை முடிந்த பின்னர் நோயுற்றவர் உடல் உறுதி பெற, ’அமுக்கரா சூரண மாத்திரை மற்றும் நெல்லிக்காய் லேகியம்’ வழங்கப்பட உள்ளது.
இந்த அரசாணையில் நோய்த் தொற்று உள்ள ஆனால் அறிகுறிகள் இல்லாத (அஸிம்ப்ட்டோமேட்டிக் பாஸிட்டிவ்ஸ்) அல்லது ஆரம்ப கட்ட நோயாளிக்கு நவீன மருத்துவ அறிஞர்களோடு இணைந்து செயலாற்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது. அப்படியான சோதனை முயற்சிக்கு உரிய ஒப்புதலை மத்திய அரசின் நோயாளி சோதனை நெறிக் குழுவிடம் பெற இந்திய முறை மருத்துவ இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவீன மருத்துவமும் இந்திய முறை மருத்துவமும் ஒருங்கிணைந்து பணி
யாற்றுவதற்கான தமிழக அரசின் முதல் வழிகாட்டுதல் அரசாணை இதுதான்.
இந்த முன்னெடுப்பு மிகச் சிறப்பாக வெற்றிபெறும் பட்சத்தில் உலக அரங்கில் சித்த மருத்துவம் சீன மருத்துவத்துக்கு இணையான நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை. இனிஇப்போதைய தேவை ஒருமித்த குரலுடன், ஒருங்கிணைந்த, அறம் சார்ந்த அறிவி
யல் பார்வை கொண்ட, காய்தல் உவத்தல்இல்லாத அணுகுமுறை ஒன்றே!
கட்டுரையாளர்: கு.சிவராமன், மருத்துவர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: herbsiddha@icloud.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT