Published : 25 Apr 2020 03:08 PM
Last Updated : 25 Apr 2020 03:08 PM

கரோனா: பரிசோதனை மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீஷியன்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. கோபிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா பரிசோதனைக்குத் தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும், மருத்துவ மேற்படிப்புப் பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

மாதிரிகளை பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீஷியன் பணியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் லேப் டெக்னீஷியன் மூலமாகவே மாதிரிகளை எடுக்க வற்புறுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள தங்களால், உடலியல் மற்றும் உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை செய்யக்கூடாது என விதிகள் உள்ளதாகவும், ஆனால் கரோனா பரிசோதனைக மாதிரிகளை எடுக்க வேண்டும் என விதிமுறைகளை மீறும் வகையில் மருத்துவமனையில் உள்ள உயரதிகாரிகள் லேப் டெக்னீஷியன்களை கட்டாயப்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீஷியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவன விதிமுறைகளை பின்பற்றபடி மத்திய, மாநில அரசுகளுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முதல்வர்களுக்கும் ஏப்ரல் 1 ஆம் தேதி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாதிரிகள் எடுக்க வகுக்கபட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x