Published : 25 Apr 2020 02:40 PM
Last Updated : 25 Apr 2020 02:40 PM

கரோனா வெளிச்சத்தில் காணாமல் போனவர்; திடீரென வந்து திசை திருப்பல் அறிக்கை வெளியிடுகிறார்: துணை முதல்வர் ஓபிஎஸ் மீது ஸ்டாலின் தாக்கு

வரலாறு காணாத கடனை தமிழக மக்கள் தலையில் சுமத்திவிட்டு, நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து நிற்கிறது அதிமுக அரசு. பட்ஜெட் உரையில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துவிட்டு தற்போது திசை திருப்பல் அறிக்கை வெளியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் 15-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கான உரிய நிதிப்பகிர்வு இல்லாததைச் சுட்டிக்காட்டியிருந்த திமுக தலைவர் ஸ்டாலின் உரிமைக்காக முதல்வர் குரலெழுப்பினால் திமுக எம்.பி.க்கள் துணையிருப்பார்கள் என அடுக்கடுக்காக பல தகவல்களைப் பதிவு செய்திருந்தார்.

இதற்கு நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓபிஎஸ், ஸ்டாலின் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக பதிலளித்திருந்தார். இதற்கு தற்போது ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“பேரிடர்களில் கட்சி அரசியல் செய்வதே எமக்குப் பெருமை(!)” என்று, பாதி மனசாட்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமியின் கீழ் நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாஜக மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும், "15-வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை” கெட்டியான திரை போட்டு மறைப்பதற்காக, என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழகத்தின் நிதித் தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட முடியாமல், பட்டப்பகலில் பறிகொடுத்துவிட்டு, அதனால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை மறைக்க - சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளையே மறந்துவிட்டு - அல்லது எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று மனப்பால் குடித்து, ஒரு நிதி அமைச்சர், கடைந்தெடுத்த ஒரு பொய் - புனைசுருட்டு அறிக்கை வெளியிடுவது மிகவும் அநாகரிகமாக இருக்கிறது.

முதல்வரின் முயற்சியால்தான் தமிழ்நாட்டிற்கு 32,849 கோடி ரூபாய் நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது என்று, “மனசாட்சியை” அடகு வைத்து விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், பிப்ரவரி 14 அன்று 2020-21 ஆம் ஆண்டிற்காக, தான் படித்த நிதிநிலை அறிக்கையையே மறந்துவிட்டாரே, மாய்மாலம் செய்கிறாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலிடுகிறது.

உரிய நிதிப் பகிர்வைப் பெற்றுவிட்டது தமிழகம் என்றால், 2020-21க்கான நிதிநிலை அறிக்கையில், “சரியான கணக்கீடுகள் மூலம்,போதிய நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியது ஏன்?

“முதல்வரின் முயற்சியால் 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.4,025 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டு, முதல் தவணை பெறப்பட்டுள்ளது” என்று இப்போது தன்னிச்சையாக, யாரும் கேட்காமலே வக்காலத்து வாங்கும் நிதி அமைச்சர், அதே நிதிநிலை அறிக்கையில், “நிதிப் பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பாக, நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக 74 ஆயிரத்து 340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் இம்மானியத்திற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பாஜக அரசைக் குற்றம் சாட்டியது ஏன்?

14 மாநிலங்களுக்கும் ஒதுக்கிடப் பரிந்துரைத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை, மத்திய அரசே இன்னும் முழுமையாக ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டிவிட்டு, இப்போது, “முதன்முதலில் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தைப் பெற்றோம். முதல் தவணையையும் பெற்றுவிட்டோம்” என்று, சிறிதும் நாணமின்றிப் பின் வாங்குவது ஏன்? மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்வது ஏன்?

அதே நிதிநிலை அறிக்கையின் வேறொரு பத்தியில், “மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் பகிர்வு 2019-20க்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது” என்று கூறியது யார்? அந்த வரலாறு காணாத வீழ்ச்சி 15-வது நிதிக்குழுவில் சரி செய்யப்பட்டு விட்டதா?

33,978.47 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, மத்திய அரசின் திருத்த மதிப்பீடுகளில் 26,392.40 கோடி ரூபாய் மட்டுமே என்று குறைக்கப்பட்டுள்ளது” எனவும்; “7,586.07 கோடி குறைக்கப்பட்ட வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலையை சிக்கலான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது” எனவும்; அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியது யார்? அதை இப்போது வசதியாக மறந்து விடலாமா?

ஏன், 2018-ம் ஆண்டு மார்ச் 15 அன்று தாக்கல் செய்த 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கு குறைந்ததால் மாநிலத்தின் நிதி ஆதாரம் தொடர்ந்து குறைந்து வருகிறது” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினீர்களே! அப்போதும் நீங்கள்தானே நிதி அமைச்சர்?

“ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 சதவீத அளவில் மத்திய அரசின் வரி வருவாய் அதிகரிக்கின்ற நிலையில், மாநிலங்களுக்கும் அதே அளவில் நிதிப்பகிர்வு இருக்க வேண்டும்” என்று “நிதித் தத்துவம்” பேசியது யார்? - மேற்கண்ட வாசகங்கள் யார் தயாரித்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன?

“மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது” என்றும், “தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்கிறோம்” என்றும் காரசாரமாக ஆற்றிய உரை யாருடையது?

சட்டப்பேரவையில் கேட்ட அந்தக் குரல், நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துடையதுதானே? அல்லது பின்னணிக் குரலா?

இவ்வளவையும் பேசிவிட்டு இன்றைக்கு, முகத்தை சட்டைப் பைக்குள் புதைத்துக்கொண்டு, அந்தர்பல்டி ஆகாயபல்டி அடித்து - “முதல்வரின் முயற்சியால் நிதிப் பகிர்வு அதிகம் கிடைத்தது” என்று அரண் அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது? எங்கிருந்து வந்தது?

நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் நிர்பந்தமா, அல்லது மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையா? “15-வது நிதிக்குழு முன்பு தமிழக நிதியுரிமைக்காக முதல்வர் வாதாடினார்” என்று கூறியிருப்பதை, “மலிவான அரசியல்” என்று நான் கூறிடவில்லை. ஏனென்றால், நிதி அமைச்சராக இருக்கும் உங்களுக்குத்தான், உங்கள் இலாகா யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியும்.

ஆனால், நான் கேட்க விரும்புவது, 15-வது நிதிக்குழுவிடம் முதல்வர் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் என்ன? அந்தக் கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட்டது எத்தனை? நிதிக்குழுவிடம் நேரில் முன் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? அதில் ஒப்புக்கொள்ளப்பட்டவை எத்தனை? அவற்றைத் தமிழக மக்களுக்கு வெளியிடத் தயாரா?

“1971 மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்” என்கிறீர்களே, அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

நிதிப் பகிர்வுக்குத் தேவையான அளவுகோல்கள் என்று மக்கள்தொகைக்கு 15 புள்ளிகள், பரப்பளவுக்கு 15 புள்ளிகள், வருமான இடைவெளிக்கு 45 புள்ளிகள், வனம் மற்றும் சூழலியலுக்கு 10 புள்ளிகள், வரி முயற்சிகளுக்கு 2.5 சதவீதம், மக்கள்தொகைப் பிறப்பு விகிதம் கணக்கெடுப்பிற்கு 12.50 புள்ளிகள் போதும் என்பது உள்ளிட்ட மேற்கண்ட ‘வெயிட்டேஜ்’ எல்லாம் தமிழக அரசு கேட்டு வாங்கியதா?

இப்படிக் கேட்டு வாங்கியதன் விளைவாகத்தான், 15-வது நிதிக்குழு, தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை 4.189 சதவீதம் என்று நிர்ணயித்துக் கொடுத்ததா? இந்த நிலை அதிமுக அரசால்தான் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வெளியிட முடியுமா?

நிதிக்குழுவிற்கு ஆய்வு வரம்புகள் வெளியிட்ட போதே, அதை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டு - பிரதமருக்குக் கடிதம் எழுதி - பாஜக ஆளாத பத்து மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதி ஆதரவு திரட்டியது திமுக மட்டுமே!

அப்போது முதல்வர், நிதி அமைச்சர், 50 அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் என்பதுதான் என் கேள்வி. "பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் கடன் உயர்கிறது" என்று கூறும் நிதி அமைச்சருக்கு, அதே அளவுகோலின் அடிப்படையில் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கும் வரி வருவாயில் நிதிப் பகிர்வு அமைந்திட வேண்டும் என்பதைக் கூற ஏன் துணிச்சல் இல்லை?

வரலாறு காணாத ரூ.4.56 லட்சம் கோடி கடனை தமிழக மக்கள் தலையில் சுமத்தி விட்டு - நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து மாநிலத்தை அதோகதி நிலையில் நிறுத்தி இருப்பது அதிமுக அரசு என்பதுதான் அப்பழுக்கற்ற உண்மை.

மாநிலத்தின் நிதி உரிமை, நதிநீர் உரிமை, கல்வி உரிமை என்று, மாநிலத்தின் எந்த உரிமையாக இருந்தாலும், அதைத் திமுக மட்டுமே நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று குரல் எழுப்பி சாதித்துக் காட்டியிருக்கிறது; இதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. நிதி அமைச்சருக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம்; அல்லது, தெரியாதது போல அவர் பாவனை செய்யலாம்!

மாநில நிதி உரிமையைக் காப்பாற்ற திமுக எம்.பி.க்கள் எப்போதும் முன்வருவார்கள் என்ற ஆக்கபூர்வமான அரசியலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிதி அமைச்சர் தவியாய்த் தவிக்கலாம்; தணல்மேல் விழுந்த புழுவாய்த் துடிக்கலாம்.
ஆனால், கரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து, “அரசியல் காழ்ப்புணர்ச்சி” - “அரசியல் ஆதாயம் தேடும்” முயற்சி என்றெல்லாம், தனது நிலையை நினைத்து, திரித்துத் திசை திருப்பி, அறிக்கை விட்டிருப்பதற்கு உள்ளபடியே வருந்துகிறேன்.

தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும்; இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x