Published : 25 Apr 2020 02:08 PM
Last Updated : 25 Apr 2020 02:08 PM

4 நாட்கள் முழு ஊரடைப்பு; சென்னையிலிருந்து அவசரப் பயணம் செல்ல அனுமதி இல்லை; வாகன பாஸ் செல்லாது: சென்னை மாநகராட்சி 

சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலானதை அடுத்து சென்னையிலிருந்து யாரும் வெளியூருக்கு அவசரப் பயணம் செல்ல அனுமதியில்லை. அதற்காக அளிக்கப்பட்ட வாகன பாஸும் ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதையொட்டி சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகிறது.

இதற்காக அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள காலகட்டத்தில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு துக்கம், திருமணம், மருத்துவம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக செல்வோருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வாகன பாஸ் வழங்கப்பட்டது.

அவசரத் தேவைக்குச் செல்லும் மக்கள் விண்ணப்பித்து வாகன பாஸ் பெற்றனர். இந்நிலையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமலாவதால் வரும் 4 நாட்களுக்கு வெளி மாவட்டங்களுக்குச் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''தமிழகம் முழுவதும் உடனடியாகப் பயணம் மேற்கொள்ளும் அவசியம் உள்ளவர்களுக்கு சென்னை உட்பட சில மாநகராட்சிகளில் பாஸ் வழங்கப்பட்டது. முழு ஊரடங்கு 4 நாட்கள் உள்ளதால் அவசியப் பயணம், உடனடிப் பயணத்துக்கான பாஸ் வழங்கப்பட மாட்டாது. ஆன்லைனிலும் விண்ணப்பிக்க முடியாது. 4 நாட்களுக்கு சென்னையிலிருந்து பயணம் செல்ல முடியாது.

துக்க, திருமண, அவசிய நிகழ்வுக்காக இந்த பாஸ் தரப்படுகிறது. 4 நாட்கள் முழு ஊரடங்கு என்பதால் இந்தக் காலகட்டத்தில் எந்த பாஸும் கிடையாது. திருமணம், மருத்துவ நிகழ்வுக்குக் கட்டாயம் கிடையாது.

துக்க நிகழ்வுக்கு மட்டும் அவசியம் கருதி அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவம் சார்ந்த பயணம் என்றால் மிக முக்கியமானவைக்கு மட்டும் அனுமதி, மற்றபடி ஏற்கெனவே இதுபோன்ற மேற்கண்ட அவசிய, அவசரப் பயணங்களுக்கான பாஸ் வாங்கியிருந்தால் அதுவும் செல்லாது''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x