Published : 25 Apr 2020 02:02 PM
Last Updated : 25 Apr 2020 02:02 PM
டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது கரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர் ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளர் மணிகண்டன். தஞ்சாவூரின் ஊரணிபுரத்துக்குத் திரும்பியவர் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இரண்டு முறை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையில் இருந்தார். 21 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளவரிடம் பேசினேன்.
கரோனா தொற்று இருந்தது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
''மார்ச் 24-ம் தேதி அதிகாலை 3.15 மணி டெல்லி விமானத்தில் தமிழகம் திரும்பினேன். அதில் பயணித்தவர்களில் 80 சதவீதம் பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் இருந்து திரும்பியவர்களே. மார்ச் 30-ம் தேதி லேசான உடம்பு வலி ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டார மருத்துவ அலுவலரிடம் அறிவித்தேன். மருந்துகளைக் கொடுத்தனர். சாப்பிட்டதும் சரியாகிவிட்டது. ஊருக்குள் இருக்கும் பழைய ஓட்டு வீட்டில் சுய தனிமைக்கு உட்படுத்திக் கொண்டேன்.
நாளுக்கு நாள் மாநாட்டுக்குச் சென்றவர்கள் நோயால் பாதிக்கப்பட்டது அதிகமானது. எதற்கும் ஒருமுறை பரிசோதித்துவிடலாம் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். ஏப்ரல் 2-ம் தேதி அன்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதித்தனர். ஏப்ரல் 6-ம் தேதி அன்று எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அங்கேயே இருந்தேன். ஏப்ரல் 10-ம் தேதி அன்று மீண்டும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இரண்டாவது முறையும் கரோனா உறுதி செய்யப்பட்ட கணத்தில் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
அதிர்ச்சியாக இருந்தது. 2-வது முறையாகக் கரோனா உறுதி செய்யப்பட்ட உடன் ஊரே அல்லோகலப்பட்டது. 7-ம் தேதி என் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. ஒன்றே முக்கால் வயதாகும் என் மகனுக்கு இரு முறை சோதனை செய்யப்பட்டது.
மருத்துவர் பேசும்போது, 'வைரல் தொற்று லேசாக இருக்கலாம், அடுத்த முறை சரியாகிவிடலாம்' என்றார். 'நன்றாகச் சாப்பிடுங்கள், ஸ்ட்ரெஸ் ஆகாதீர்கள்' என்றார். பாலிவுட்டில் கனிகா கபூருக்கு 5 முறை பாஸிட்டிவ் வந்து சரியானது, திருச்சி வந்த ஈரோடு இளைஞருக்கு 3-வது முறை தொற்று இல்லை என்று உறுதியானது உள்ளிட்ட செய்திகளால், மனது கொஞ்சம் தெளிவானது.
தொடர்ந்து காய்ச்சிய நீர், கபசுரக் குடிநீர், ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொண்டோம். பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், வைட்டமின் சி உள்ளிட்ட மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு உடம்பில் எந்த பாதிப்பும் இல்லை, எப்போதும் போலவே இருந்தேன்.
உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பீர்களே?
மன அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. முதல்முறை வட்டார மருத்துவ அலுவலரிடம் பேசிவிட்டு வருவதற்குள்ளாக ஊருக்குள் தகவல் கசிந்துவிட்டது. மக்கள் எல்லோரும் எனக்குக் கரோனா என்று பேசினர். ஏப்ரல் 2-ம் தேதி அன்று சோதனைக்காக என்னை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்வதைப் பார்த்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என் படங்கள் பகிரப்பட்டன. சோதிக்கும் முன்னரே எனக்குக் கரோனா என மக்களே முடிவுசெய்தனர்.
எங்கள் தெருவினர் வெளியே சென்றால், மற்றவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தனர். சுயநலம், பயம், அறியாமை மூன்றும் சேர்ந்தால் மனிதன் எவ்வளவு கொடூரமாக மாறுவான் என்பதை அன்றுதான் பார்த்தேன். நேற்றுகூட நான் வீட்டுக்குத் திரும்பிவந்த பாதையில் சாணியைக் கரைத்து ஊற்றினர். கிருமிநாசினி தெளித்தனர். ஏன்தான் ஊருக்கு வந்தோம் என்று வேதனைப்பட்டேன்.
கரோனா தொற்று உங்களுக்கு ஏற்பட்டதை அறிந்த வீட்டினர் மனநிலை?
ஆரம்பத்தில் மிகவும் பயந்தனர். அழுது, புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இனி உயிருடன் திரும்பமாட்டேன் என்று நினைத்தனர். இத்தனை ஆண்டுகளாக நான் அழுது பார்த்திராத அப்பாவும் கண்ணீர் விட்டார். அனைவரும் அழுவதைப் பார்த்து மகனும் புரியாமலே அழுதான். நான்தான் அவர்களுக்குத் தைரியம் ஊட்டினேன்.
21 நாட்கள் மருத்துவமனை வாசம் எப்படி இருந்தது?
கரோனா வார்டில் மொத்தம் 40 பேர், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தோம். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம் நண்பர்களே. மருத்துவமனையில் கொடுக்கப்படும் உணவுகளைவிட, ஜமாத்தில் இருந்து அதிக அளவில் ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினர். நான் பார்த்தவரை நோயாளிகள் அனைவரும் நம்பிக்கையுடனே இருக்கின்றனர். நோயைவிட, வெளியில் நடக்கும் நிகழ்வுகளே அவர்களிடத்தில் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டோர் குறித்து?
மூத்த மருத்துவ அதிகாரிகளைவிட முதுகலை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் பணிதான் மெய்சிலிர்க்க வைத்தது. செவிலியர் ஒருவர் ஒன்றரை வயதுக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு 7 நாட்கள் தொடர் பணி செய்தார். 'நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?' என்று கேட்டுத்தான் எல்லா செவிலியர்களும் தங்கள் உணவில் கை வைத்தனர். தூய்மைப் பணியில் ஈடுபடும் அக்காக்கள், ''தம்பீ, மாஸ்க் மட்டும் போட்டுக்குங்க, மாப் பண்ணீட்டு போயிடறோம்'' என்றனர். அவர்களின் பணி மகத்தானது.
அரசுத் தரப்பில் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சில சிகிச்சை இடங்களில் டிவி உள்ளதாகக் கூறுகின்றனர். எல்லா இடங்களிலும் அந்த வசதி இல்லை. நான் கைவசமிருந்த அமேசான் கிண்டிலில் படித்தேன். ப்ரைமில் படங்கள் பார்த்தேன். மனநல மருத்துவர்கள் மூன்று வேளையும் பேசுகின்றனர். அதைத் தாண்டி அரசு, தன்னார்வலர்களின் உதவியுடன் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம்.
திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட மற்றவர்கள் பேசியதை எப்படி உணர்ந்தீர்கள்?
சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷிடம் பேசினேன். முன்னாள் செயலர் ராதாகிருஷ்ணனும் பேசினார். மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் அக்கறையுடன் பேசுவார். திமுகவில் இருந்து ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் என்னிடம் பேசினர். இது பெரிய தன்னம்பிக்கையை, நேர்மறை எண்ணத்தை விதைத்தது. 'எங்கோ ஒரு மூலையில் இருக்கிறோம். ஊரே எதிர்க்கும் நம்மிடம், அவர்கள் நேரத்தை ஒதுக்கிப் பேசுகிறார்கள்' என்ற எண்ணமே மகிழ்வை அளித்தது. அழுத்தத்தைக் குறைத்தது.
இதேபோல கரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களிடமும் ரேண்டமாகப் பேசலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர் என சிலரிடம் பேசும்போது அவர்களின் தன்னம்பிக்கை கூடும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சொல்ல விரும்புவீர்கள்?
கரோனா தொற்றுள்ளவர்கள் ஏதோ பெரிதாகத் தவறு செய்துவிட்டது போல மக்களின் மனநிலை உள்ளது. இது எதிர்பாராத விபத்து மட்டுமே. நாங்கள் வேண்டுமென்றே சென்று கிருமியை வாங்கி வரவில்லை. மரத்தின் மீதோ, தூணின் மீதோ தெரியாமல் நாம் மோதிவிடுவது போல கிருமி எங்கள் மீது மோதிவிட்டது, அவ்வளவே.
இதனால் யாரும் குற்ற உணர்ச்சியுடன் இருக்க வேண்டியதில்லை, என்னால் குடும்பம் பாதிக்கப்பட்டுவிட்டது, ஊரே முடக்கப்பட்டு விட்டது என்று மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். வேண்டுமென்றே நாம் எதையும் செய்யவில்லை. சுய தனிமைப்படுத்திக் கொண்டு, நம்மால் யாரும் நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக்கொண்டால் போதும்'' என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் மணிகண்டன்.
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT