Published : 25 Apr 2020 01:05 PM
Last Updated : 25 Apr 2020 01:05 PM
தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 21 ஆயிரத்து 770 பேருக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1,000 நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ரூ.1,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.25) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ், 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் இஎஸ்ஐ எனப்படும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் 21 ஆயிரத்து 770 தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 2.177 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT