Published : 10 May 2014 10:01 AM
Last Updated : 10 May 2014 10:01 AM

குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: தென் சென்னை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தென் சென்னை பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் தனியார் லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை குடிநீர் வாரியம் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை உள்ள ஒரு சில பகுதிகளுக்கு ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இவை தவிர ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி. நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு தேவையான குடிநீரை தனியார் சிலர் லாரிகள் மூலம் விற்பனை செய்கிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தமாக தண்ணீர் தேவைப்படுவோர் இவர்களை அணுகி தேவையை பூர்த்தி செய் கிறார்கள். லாரிகளில் குடிநீரை விற்பவர்கள் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார்கள்.

இந்நிலையில் பொன்மார், மாம்பாக்கம் உள்ளிட்ட ஊராட் சிப் பகுதிகளில் தண்ணீர் எடுக்க நிர்வாகம் அனுமதி அளிப்ப தில்லை. எனவே, இதைக் கண்டித்து தென் சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 8-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஒஎம்ஆர், கோவளம், வேளச்சேரி, பள்ளிக் கரணை, புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ஹோட்டல்கள், மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக தென் சென்னை தண்ணீர் லாரி உரிமை யாளர்கள் சங்க தலைவர் நெஜ லிங்கம், செயலாளர் ராஜா ஆகி யோர் கூறுகையில், ‘‘பொன்மார், மாம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்படுகிறது. எங்களுக்கு சொந்தமான இடங்களிலும் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கிறார்கள்.

எனவே அங்கு தண்ணீர் எடுக்க அனுமதி கொடுக்க வேண்டும், சுங்கச் சாவடிகளில் தின கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி எங்களுக்கும் லோக்கல் பாஸ் கொடுக்க வேண்டும். போலீஸ் கெடுபிடியை நிறுத்த வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (மே 8) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x