Published : 25 Apr 2020 11:51 AM
Last Updated : 25 Apr 2020 11:51 AM
மதுரையிலும் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இனி இயல்பு நிலை எப்போது திரும்புமோ என்று காய்கனி மற்றும் மளிகைக் கடையில் மொத்தமாகக் குவிகிறார்கள் பொதுமக்கள். இதனால் தனிமனித விலகல் எனும் கட்டுப்பாடு காற்றில் பறக்கிறது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 33 நாட்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் அதை மதிக்காத மக்கள், நாளடைவில் காவல்துறையின் கெடுபிடி மற்றும் விழிப்புணர்வு காரணமாக வீட்டிலேயே இருக்க ஆரம்பித்தார்கள். இதனால் படிப்படியாக சாலைகளில் ஆட்களின் நடமாட்டம் குறைந்தது. மதுரையில் சுத்தமாக கூட்டம் குறைந்து, கடைகள் காத்தாடுவது பற்றி நேற்று நாமும் கூட சுட்டிக்காட்டியிருந்தோம்.
இன்று அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டது. இன்று அதிகாலையில் இருந்தே மதுரையில் உள்ள காய்கனி கடைகளில் கூட்டம் அலைமோதியது. தனிமனித இடைவெளியைப் பின்பற்ற நினைத்தாலும்கூட, மற்றவர்கள் உள்ளே புகுந்து வாங்க முற்பட்டதால் எல்லோரும் அப்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால், வரிசை முறையை எல்லாம் மறந்து, ஒவ்வொரு கடையிலும் பத்திருபது பேர் முண்டியடித்தார்கள். சர்வேயர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளழகர் திருவிழாவைக் காண வந்தவர்கள் போல வீதியை நிறைத்து மக்கள் நடந்தார்கள். இருசக்கர வாகனங்களுக்குகூட வழியில்லாத அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது.
பலசரக்குக் கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் கூட இதேநிலைதான். வரிசையில் நின்று பொறுமையாகச் சென்றால், பொருட்கள் அத்தனையும் தீர்ந்துவிடும், 12 மணிக்குக் கடையையே அடைத்து விடுவார்கள் என்று ஆளாளுக்கு முண்டியடித்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
என்ன காரணம்?
முழு ஊரடங்கை அறிவித்த முதல்வர், மளிகைக் கடைகளுக்கும் அனுமதியில்லை என்று அறிவித்ததே இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏன் இப்படிக் குவிகிறீர்கள் என்று கேட்டால், "மதுரையில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது. இந்த 4 நாள் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்கிறார்கள் அதனால்தான் வந்தோம்" என்று சொன்னார்கள் பொதுமக்கள்.
ஏற்கெனவே, மதுரை மாவட்டத்தில் வாகனங்களுக்கு க்யூஆர் குறியீடு அடங்கிய பாஸ் கட்டாயம் என்று அறிவித்ததால், நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் குவிந்தார்கள். வழக்கமான முறையே நீடிக்கும் என்று அறிவித்தபிறகே நிலைமை சீரானது. இன்று மீண்டும் அதே குளறுபடி.
தீவிரக் கண்காணிப்பு உள்ள வீதிகளில் இருந்தும் சிலர் வெளியேற முற்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இந்த நிலை நீடிக்காதிருக்க தெளிவான திட்டமிடலும், குழப்பமில்லாத அறிவிப்புகளுமே தேவை. செய்யுமா மாவட்ட நிர்வாகம்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT