Published : 25 Apr 2020 07:37 AM
Last Updated : 25 Apr 2020 07:37 AM

இவர் நம்ம வாசகர்!- ஆண்டுச்சந்தா கட்டுனது ஏன்னு தெரியுங்களா..?

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று திருப்பூர் வெள்ளியங்காடு முகவர் ப.சக்திவேல் பேசுகிறார்...

நான் 14 வருஷமா ஏஜென்ட்டா இருக்கேனுங்க. வெள்ளியங்காட்டுல ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துற ஏ.கதிர்வேல் சார், அடிக்கடி பேப்பரை மாத்துறவருங்க. வழக்கம்போல, இந்து தமிழ் வந்த கொஞ்ச நாள்ல அதுக்கு மாறுனாருங்க. அடுத்து அவங்க அண்ணன், தம்பிங்க வீட்டுக்கும் ‘இந்து தமிழ்' வாங்குனாரு. எத்தன நாளைக்குன்னு தெரியலியேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும்போதே, எல்லாத்தையும் ஒட்டுக்கா ஆண்டுச் சந்தாவா மாத்திட்டாருங்க.

"ஏனுங்க சார்?"னு கேட்டேனுங்க. "இந்தப் பேப்பர் ரொம்ப நல்லாயிருக்குது. போடுற செய்திகளையும் ரத்தினச் சுருக்கமா போடுறாங்க. பக்கத்தையும் மிச்சப்படுத்தி, நம்ம நேரத்தையும் மிச்சப்படுத்துது.

நறுக்குன்னு நாலு வரியில எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிற மாதிரி இருக்குதுங்க. அதேநேரத்துல நின்னு நிதானமா வாசிக்கிறதுக்கு பாரபட்சமே இல்லாம 2 பெரிய கட்டுரையை நடுப்பக்கத்துல போடுறாங்க. இந்தப் பேப்பரை எந்தச் சூழ்நிலையிலேயும் மாத்திடக்கூடாதுன்னுதான் ஆண்டு சந்தாவா மாத்திட்டோம்"னு சொன்னாருங்க.

என்றைக்காவது ஒரு நாள் பேப்பர் போடாம விட்டுப்போச்சுன்னா, "மதியம் 2 மணி ஆனாலும் கொடுத்துட்டுப் போ கண்ணு"ன்னு நச்சரிப்பாருங்க.

அவங்க பாப்பாவுக்கு ஒரு நாள் பள்ளிக்கோடத்துல பத்திரிகைச் செய்திகளை கட் பண்ணி கொண்டு வரச் சொன்னாங்களாம். பாப்பா ‘இந்து தமிழ்' செய்திகளை கட் பண்ணி கொண்டு போயிருக்குது. "கிளாஸ்லேயே உன்னோட புராஜெக்ட் தான் கண்ணு நல்லாயிருக்குது"ன்னு பாராட்டுனாங்களாம் அவங்க மிஸ்ஸு. அதுல இருந்து அந்தப் பாப்பா படிச்ச செய்தியை எல்லாம் கத்திரிச்சு வெக்கிதுங்களாம். அதனாலதான் இப்படி தொல்லை பண்றோம்னு கதிர்வேல் சார் சொன்னாரு. ‘இந்து தமிழ் முகவர்'னு சொல்லும்போது நமக்கே கொஞ்சம் கெத்தாத்தாங்க இருக்குது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x