Published : 24 Apr 2020 06:32 PM
Last Updated : 24 Apr 2020 06:32 PM
அறிவிப்புகள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்; பதற்றத்தை உருவாக்கக்கூடாது என மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில், கரோனோ தொற்று சமூகப்பரவல் நிலையை எட்டிவிட்டதோ என்று சந்தேகம் வருகின்ற அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, மாவட்ட நிர்வாகம் ஊரடங்கை இன்னும் சிறப்பாகவும் முழுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று முடிவுசெய்வதை வரவேற்கிறேன். ஆனால், இம்முடிவினையொட்டி நேற்று முன்தினம் இரவு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையும் காவல் துறையின் சார்பில் வெளியான ஆடியோ குரல் பதிவும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
மதுரையில் பொதுவெளியில் சுற்றுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது உண்மைதான். அதனைக் கட்டுக்குள் கொண்டுவர சரியான முயற்சிகள் தேவை. அதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் திசை திருப்பப்பட்டுவிடக் கூடாது.
அரசுப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள், அத்தியாவசியப் பணிகளுக்கான அனுமதிபெற்றவர்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அன்றாடப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனைவரும் மறுநாள் காலை இருசக்கரவாகனத்துக்கான அனுமதியைப் பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும் என முந்தைய நாள் இரவு அறிவிப்பு வெளியிடுவது எந்தவகையில் பொருத்தமான செயல்?
இவ்வளவு பேருக்கும் ஒரே நாளில் அனுமதி கொடுப்பதற்கான நிர்வாக ஏற்பட்டினை உறுதிசெய்யாமல், இந்த அறிவிப்பைச் செய்திருக்கக் கூடாது. அதுவும் ஆட்சியரின் அலுவலகத்திலேயே கூட்டம் கூடுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சமூக பரவலாக்கம் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்படும் அறிவிப்புகளின் விளைவு அதற்கு எதிர்மறையான செயல்பாட்டுக்கே வழிவகுத்திருக்கிறது.
அதேபோன்று காவல் துறையின் சார்பில் செய்யப்படும் அறிவிப்புகள், முறையாக உயர் அதிகாரியால் மட்டுமே பொது ஊடகங்களில் பகிரப்பட வேண்டும்; அந்தந்த பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் வாட்ஸ் அப்பில் குரல் பதிவினை வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை மக்களே, நாம் கரொனோவின் சமூகப்பரவல் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஊரடங்கிற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து பொதுவெளியில் இருப்பது நிர்வாகத்துக்கு பதட்டத்தையும், அழுத்தத்தையும் உருவாக்குகிறது. அதிலிருந்துதான் அவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழலுக்கு அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். நிலமையை புரிந்து கொண்டு முழுமையாக ஒத்துழைப்பை தாருங்கள் எனக்கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT