Published : 24 Apr 2020 06:34 PM
Last Updated : 24 Apr 2020 06:34 PM
கரோனா தொற்றின் தீவிரத்தை விட தொழில் முடக்கத்தால் பலருக்கும் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. கட்டுமானத் தொழிலுக்கு அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும் அந்தத் தொழிலாளர்களும் இப்போது வேதனையின் விளிம்பில்தான் நிற்கின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் வேதனை ததும்பப் பேசினார் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி பைசல். கட்டுமானத் தொழிலாளி மட்டுமல்லாது கவிஞருமான பைசல் குறும்படங்களும் இயக்கிய படைப்பாளி. கலை இலக்கியப் பெருமன்றத்தின் தக்கலை கிளை நிர்வாகியாக இருக்கும் பைசலுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் அவர் சார்ந்திருக்கும் மன்றத்தின் தோழர்களும், சில நண்பர்களும்தான் உதவுகிறார்கள்.
ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பைசலுக்கு அதைப்பற்றிப் பேசும்போது கவலையில் குரல் கம்முகிறது. “வெளியில் இருந்து பார்க்கிறவங்க ரொம்ப ஈஸியாக, ‘கொத்தனார் வேலை’ன்னு சொல்லிடுவாங்க. ஆனா, இதைச் சார்ந்து எத்தனை உபதொழில்கள் இருக்கு தெரியுமா? செங்கல் சூளையில் மண் லோடும், விறகு லோடுகளும் டெம்போவில் வந்து இறங்குகிறது. நீர் ஊற்றி மண் குழைக்கப்பட்டு அச்சில் செங்கல் வார்க்கப்பட்டு உலர்த்தி சூளையில் அடுக்கப்படுகிறது. தீ போடப்பட்டு செங்கல் சிவக்கிறது. சூளையில் வேலை செய்யும் பெண்கள் கையில் சம்பளம் வாங்கியதும். மனப் புண்ணும் கைப்புண்ணும் மறைகிறது. சுட்ட செங்கல்களை சூளையில் இருந்து பிரித்து டெம்போவில் அடுக்குகிறார்கள். வீடு கட்ட நாங்கள் அந்தக் கல்லை எடுத்து வருகிறோம். அதற்கு இடையிலேயே எத்தனை வேலைகள் இன்று முடங்கி இருக்கிறது கவனித்தீர்களா?
வீடு கட்ட முதலில் மண் வெட்டும் தொழிலாளிகள் அஸ்திவாரம் தோண்டுவார்கள். லாரிகளில் கருங்கல்லும், மணல், சிமென்ட்டும் வந்திறங்கும். மறுநாள் கையாள் கலவை போடுவார். சில நாள்களில் நான்கைந்து பேர் சேர்ந்து அஸ்திவாரம் கட்டி முடிப்போம். அதன் பின்பு செங்கல் கட்டு நடைபெற்று, சென்ட்ரிங் பலகை அடித்து, கம்பி கட்டி கான்கிரீட் போடுறோம். அது செட் ஆகி பலகை பிரித்ததும், எலக்ட்ரீசியன் ஒயரிங் முடித்து, சாரங்கட்டி பூச்சுப் பணி முடியும். எத்தனை தொழிலாளர்களுக்கு இதற்கு இடையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்? பொருள்களைச் சுமந்துவரும் வகையில் ஓட்டுநர்கள் பலருக்கு வேலை கிடைக்கும்.
எல்லாம் முடிந்தபின் டைல்ஸ் கடையிலிருந்து டைல்ஸ் எடுத்து ஒட்டும் பணி நடக்கும். அதைச் செய்யத் தனி ஆட்கள் இருக்கிறார்கள். பிறகு கதவுகளை ஆசாரி செய்து மாட்டுவார். வர்ணம் தீட்ட பெயிண்டர் வருவார். அவர்கள் நான்கைந்து பேர் ஒவ்வொரு வீட்டிலும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இப்படி நாலு சுவர் எழும்பி ஒரு வீடு உருவாவதில் பல பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது. ஊரடங்கில் கட்டுமானப் பணிகளும் முடங்கியுள்ளதால் இத்தனை பேரின் வாழ்வும் கேள்விக்குள்ளாகியுள்ளது.
அரசு ஊரடங்கில் இருந்து கட்டுமானத் தொழிலுக்கும் அது சார்ந்த தொழில்களுக்கும் முழு விலக்கு அளிக்க வேண்டும். இயல்பிலேயே தனிமனித விலகலைக் கடைப்பிடித்தே வேலை செய்கிறோம். எங்களுக்கு அப்படி விலக்கு அளிக்க முடியாதபட்சத்தில் அரசு உரிய நிவாரணத் தொகை வழங்கவேண்டும். அல்லது ஆயிரம் ரூபாயில் ஊரடங்கை நகர்த்தும் சாமர்த்தியத்தையாவது கற்றுத்தர வேண்டும்” என்ற பைசலின் குரலில் உடலுழைப்புத் தொழிலாளியின் விசும்பல் கேட்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...