Published : 24 Apr 2020 02:57 PM
Last Updated : 24 Apr 2020 02:57 PM
மதுரையில் காய்கனி மற்றும் மளிகைக் கடைகள் கூட்டமின்றிக் காத்தாடுகின்றன. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதே இதற்குக் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தை மூடப்பட்டு, அதற்குப் பதிலாக பரந்து விரிந்த வக்பு வாரியக் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு கடைகள் மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக அங்குள்ள தகவல் பலகையில் காய்கனிகளின் விலையை தினந்தோறும் எழுதிப்போடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த மூன்று வாரமாக நான் அங்கே காய்கறி வாங்குகிறேன், முதல் வாரம் சுமார் 50 கடைகள் இருந்தன. இரண்டாம் வாரத்தில் கடைகளின் எண்ணிக்கை 40 ஆக குறைந்தது. இந்த வாரம் சென்றபோது கடைகளின் எண்ணிக்கை 25 ஆகிவிட்டது. அதேபோல வாடிக்கையாளர்கள் கூட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது. 10 மணிக்கே கடைகள் காத்தாடுகின்றன என்பதால், அதற்கு மேல் மொட்டை வெயிலில் உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக வாடிய காய்கறிகளைப் பாதி விலையில் தள்ளிவிடுகிறார்கள் வியாபாரிகள்.
இன்னும் சிலர் அங்கே பாதுகாப்புக்கு இருக்கிற காவல்துறையினருக்கு காய்கனிகளை இலவசமாக கொடுத்துவிட்டு நகர்கிறார்கள். இந்த நஷ்டத்தை வியாபாரிகள் ஈடுகட்டும் விதமாக இப்போதெல்லாம் காய்கனி விலைப் பட்டியல் எழுதிப்போடுவதில்லை. சந்தையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பில் இருக்கிற போலீஸாரும் அதைக் கண்டுகொள்வதில்லை.
அங்கே கடை வைத்துள்ள சரஸ்வதி என்ற பெண்ணிடம் பேசியபோது, "முதல் வாரம் எல்லா சனமும் காய்கனி வாங்க வந்துது சார். ரெண்டாவது வாரத்துல ஏழை, பாழைங்க வர்றது குறைஞ்சுது. இப்ப அவங்க சுத்தமா வர்றதில்லை. வசதி படைச்சவங்க மட்டும்தான் வர்றாங்க. பாவம், வேலைவெட்டிக்குப் போனாத்தான அவங்ககிட்ட காசு புழங்கும்? தெருவுக்குத் தெரு காய்கனி விற்கிற வண்டிகள் போறதும் யாவாரம் கொறையுறதுக்குக் காரணம்" என்றார்.
மதுரை அரும்பனூரில் பலசரக்குக் கடை வைத்துள்ள மலைச்சாமி என்பவரும் இதே கருத்தையே சொல்கிறார். "ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் கடைகள்ல அநியாயத்துக்கு யாவாரம் நடந்தது. வாரச்சரக்கு வாங்குறவங்ககூட, மாசச்சரக்கு வாங்குனாங்க. மாசச்சரக்கு வாங்குறவங்க கூடுதலா 2 மாசத்துக்கு வாங்கிட்டாங்க. இப்ப எங்க கடைக்கும் ஆட்கள் வர்றதில்ல. நாங்களும் மொத்த கடைக்குப் போறதில்ல.
முதல் வாரத்துல ரொம்ப பிகு பண்ணிய வியாபாரிகள், இப்போது போன் போட்டு 'என்ன மலைச்சாமி... கடைக்கு வரவேயில்லை. வாங்க ரேட்டெல்லாம் பாத்துப் போட்டுக் குடுக்குறேன்'னு கெஞ்சுறாங்க. நாங்க வாங்கி என்ன பண்றது... மக்கள்கிட்ட காசு இல்லியே?" என்றார் மலைச்சாமி.
முன்பெல்லாம் 1 மணி வரை கடை என்றால், போலீஸ்காரர்கள் கண்ணில் படவில்லை என்றால் ஒன்றரை வரையில் கடையை நடத்திய வியாபாரிகள் கூட இப்போது 12 மணிக்கு முன்பே கடையை அடைத்துவிட்டுப் போய்விடுவதையும் பார்க்க முடிகிறது. மதுரையில் தொற்று அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், இன்று முதல் காவல்துறையினரின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, மதுரை அண்ணா நகர், கே.கே.நகர் போன்ற பகுதிகளில் இயங்கிய ஒன்றிரண்டு பலசரக்குக் கடைகளும், பழக்கடைகளும் கூட மூடப்பட்டு விட்டன. இனி வரும் காலங்கள் மக்களுக்கு மட்டுமல்ல, வியாபாரிகளுக்கும் சோதனைக் காலமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT