Published : 24 Apr 2020 02:21 PM
Last Updated : 24 Apr 2020 02:21 PM
கரோனா வைரஸ் தடுப்புப் பணியை துரிதமாக மேற்கொள்ள சுகாதாரத்துறையில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என புதுச்சேரி சுகாதார ஆய்வாளர், உதவியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் வருமுன் காப்போம் (Preventive) என்ற திட்டத்தின் கீழ் சுகாதார உதவியாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களில் 103 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். டெங்கு, மலேரியா மற்றும் சமுதாயத் தொற்றுள்ள அனைத்துவிதமான நோய்களுக்கும், நோய் பரவாமல் தடுப்பதும்தான் இவர்களுடைய முக்கியப் பணி.
தற்போது இவர்கள் கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தி வைப்பது, தினந்தோறும் அவர்களைச் சந்தித்து அறிகுறிகளைக் கண்டறிவது, ஆலோசனைகள் கூறுவது, சமுதாயத் தொற்றாக மாறாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைப்பது, வீடு வீடாகச் சென்று எவருக்கேனும் காய்ச்சல் இருக்கிறதா? என ஆய்வு செய்வது, வெளிமாநிலத்தில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா? என்று கணக்கெடுப்பது போன்ற முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்தந்த மாவட்ட எல்லைகளில் வருபவர்களைப் பரிசோதித்து அனுமதிப்பது, 104 கரோனா கட்டுப்பாட்டு அறையில் மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது போன்ற பணிகளையும் இவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் குறைந்தபட்ச எண்ணிக்கை கொண்ட சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள் கரோனா தடுப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு வருவதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகவே சுகாதாரத் துறையில் உள்ள அனைத்துக் காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்பி கரோனா தடுப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் புதுச்சேரி சுகாதார ஆய்வாளர், உதவியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜவகர் கூறும்போது, ‘‘மத்திய அரசின் கர்த்தார்சிங் கமிட்டி அறிவுறுத்தலின்படி 5 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார உதவியாளர், 20 ஆயிரம் மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருக்க வேண்டும்.
ஆனால், புதுச்சேரியில் மக்கள்தொகைக்கு ஏற்ற பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறைந்த எண்ணிக்கையில் உள்ள சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள் இந்த கரோனா தொற்றுநோய் விழிப்புணர்வு பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். சுகாதாரத் துறையில் உள்ள சுகாதார உதவியாளர், ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப புதுச்சேரி சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்கம் புதுச்சேரி அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்தப் பணியை மேலும் துரிதமாகச் செய்வதற்கு தற்போது காலியாக உள்ள பணியிடங்களை புதுச்சேரி அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங்களை உருவாக்க வேண்டும். நமது அண்டை மாநிலமான தமிழகத்தில் தற்போது கரோனா தடுப்புப் பணிக்கு 1,500க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி பணிச்சுமையைக் குறைத்துள்ளனர்.
எனவே, புதுச்சேரி மாநிலத்திலும் அதுபோன்று சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும்.
கரோனா பணியில் நாங்கள் முன்னின்று பணியாற்றி வருகிறோம். ஆனால் அரசும், சுகாதாரத்துறையும் எந்தவொரு செயலுக்கும் எங்களை அங்கீகரிக்காதது வருத்தமளிக்கிறது'' என்று ஜவஹர் கூறினார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது ,‘‘சுகாதாரத் துறையில் இருக்கின்ற பணியாளர்களைக் கொண்டு கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறோம். மாநிலத்தில் வைரஸ் தொற்று பெருமளவு குறைந்துள்ளது. காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில் முழுமையாக நிரப்புவது என்பது முடியாத ஒன்று. தொடர்ந்து கரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT