Published : 24 Apr 2020 02:03 PM
Last Updated : 24 Apr 2020 02:03 PM

மருத்துவர் சைமனின் உடலை கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யத் தன்னார்வலர்கள் தயார்: கராத்தே தியாகராஜன்

அரசு அனுமதித்தால், சென்னையில் கரோனா தொற்றால் இறந்த மருத்துவர் சைமனின் உடலை அவரது விருப்பத்தின்படியே கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உரிய முறையில் நல்லடக்கம் செய்யத் தன்னார்வலர்கள் தயாராக இருக்கிறார்கள் என சென்னையின் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், ''தான் இறக்க நேரிட்டால் தனது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்க வேண்டும் என்று மருத்துவர் சைமன் தனது மனைவியிடம் முன்கூட்டியே தெரிவித்திருக்கிறார். தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று சைமனின் மனைவி முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். கீழ்ப்பாக்கம் கிறித்தவக் கல்லறைத் தோட்டத்து நிர்வாகமும் சைமனின் உடலை அங்கு நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்கிடுவோம் என்று தெரிவித்திருக்கிறது.

நோய்த்தொற்று பரவாத வண்ணம் மருத்துவ நெறிமுறைகளின்படியே மருத்துவரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்ய மாநகராட்சி விதி 325 (சி)-யின் படி மாநகராட்சி ஆணையரின் உத்தரவு பெற்று அனுமதிக்கலாம். இதில் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை.

ஏற்கெனவே சுனாமி சமயத்தில் இறந்தவர்களின் உடல்களை எவ்வித உடற்கூராய்வும் செய்யாமல் ஆங்காங்கே நல்லடக்கம் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகர ஆணையர்களுக்கு அப்போதைய தலைமைச் செயலாளர் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்த முன்னுதாரணம் உண்டு.

சென்னையில் ஆதரவற்றோரின் உடல்களை எடுத்து நல்லடக்கம் செய்யும் பணிகளையும் எரியூட்டும் காரியங்களையும் ‘எம்எம்வி நேசக்கரம்’ என்ற அறக்கட்டளை அமைப்பு சேவையாக செய்து வருகிறது. அந்த அறக்கட்டளையின் தலைவர் வேலுவிடம் மருத்துவர் சைமன் விவகாரம் குறித்துப் பேசினேன்.

தங்களிடம், நோய்த்தொற்றுப் பரவாமல் உடலை எடுத்துச் சென்று புதைப்பதற்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், அதற்கென தேர்ச்சிபெற்ற பணியாளர்களும் இருக்கிறார்கள். மாநகராட்சி அனுமதியளித்தால் மருத்துவரின் உடலை எவ்விதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகவே கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்துக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாக வேலு என்னிடம் தெரிவித்தார்.

எனவே, மருத்துவர் சைமன் மனைவியின் கோரிக்கையை ஏற்று மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்ய தமிழக முதல்வர் அனுமதியளிக்க வேண்டும். அப்படி அனுமதித்தால் தமிழக அரசையும் முதல்வரையும் மருத்துவ உலகம் மட்டுமல்லாது பொதுமக்களும் பெரிதும் நன்றியுடன் பாராட்டுவார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் கராத்தே தியாகராஜன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x