Published : 24 Apr 2020 01:34 PM
Last Updated : 24 Apr 2020 01:34 PM
ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஊடகத்தினர் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும், அமைச்சர் வேலுமணி காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை.
''கரோனா தொற்றினால் பொதுமக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருவது கண்டனத்திற்குரியது.
கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5.30 மணி முதலே வேலை பார்த்து வரும் நிலையில், பகல் 11 மணிவரை அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்பதில் தொடங்கி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என்பதையும், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் வேலுமணி களத்திலேயே இல்லை என்பதையும், திமுக எம்எல்ஏ கார்த்திக் சுட்டிக்காட்டியதை, ஒரு இணைய இதழ் வெளியிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக , பத்திரிகையாளர்கள் ஜெரால்டு மற்றும் பாலாஜி இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பலமணி நேரம் அடைத்து வைத்திருந்ததும், அதன்பின்னர் இரவு நேரத்தில் ஆன்லைன் பதிப்பாளரும் நிர்வாக இயக்குநருமான ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதும் சட்டவிரோத செயல்பாடாகும்; ஆணவ அதிகாரத்தின் வெளிப்பாடாகும்.
ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு, ஏற்கெனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது முதல்வரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலுமணியும் காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பேரிடர் நேரத்தில், இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட்டு, ஆன்லைன் பதிப்பாளரை விடுவித்து, ஊடகத்தினர் இடையூறின்றி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திட வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT