Published : 24 Apr 2020 01:22 PM
Last Updated : 24 Apr 2020 01:22 PM

ஓசூரில் தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் நகரும் காய்கறி விற்பனை தள்ளுவண்டி

ஓசூர்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்ய வசதியாக மானிய விலையில் தள்ளுவண்டிகளை வழங்கும் திட்டம் ஓசூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓசூர் வட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் எம்ஐடிஏ - 2019-20 திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் நலிவடைந்த 10 காய்கறி வியாபாரிகளுக்கு ரூ.15 ஆயிரம் மானியத்தில் நகரும் காய்கறி விற்பனை தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்வு ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ராம்பிரசாத் பங்கேற்று பயனாளிகளுக்கு நகரும் காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கினார்.

இதுகுறித்து ஓசூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் எஸ். சிவசங்கரி கூறியதாவது, ''தோட்டக்கலைத் துறையில் மானிய விலையில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு, நடமாடும் காய்கறி விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தள்ளுவண்டிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் அனைவரும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனால் தள்ளுவண்டிகளின் மூலம் மக்களின் வாழ்விடங்களுக்கே சென்று காய்கறிகளை விநியோகம் செய்யும் பொருட்டு நடமாடும் காய்கறி விற்பனை தள்ளுவண்டிகள் தோட்டக்கலைத் துறையின் மூலமாக மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

இந்த நிகழ்வில் தோட்டக்கலை அலுவலர் கவுசல்யா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கோவிந்தராஜ், திருமுருகன், திருவேங்கடம், புத்தன் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x