Published : 24 Apr 2020 11:50 AM
Last Updated : 24 Apr 2020 11:50 AM
காவல் ஆய்வாளரான தனது மனைவிக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தன்னையும் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். சிதம்பரம் பகுதி மக்களுக்குக் கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, பம்பரமாகச் சுற்றிவந்த இவர், தற்போது ஓய்வில் இருக்கும் நிலையில், மக்களுக்கு முகநூல் மூலமாக உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
''எல்லாம்வல்ல சிதம்பரம் நடராஜப் பெருமான் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எந்தத் தொற்றும் ஏற்படாமல் காத்தருள்வார். நமது காவல்துறை நண்பர்கள் யாருக்கும் எந்தத் தொற்றும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நடராஜப் பெருமானை அனுதினம் வேண்டுகிறேன்.
அன்புள்ள நண்பர்களே... முதலில் எனது உடல்நலம் குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கரோனோ வைரஸின் தீவிரம் நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். எனவே நான் என்னுடைய கடமைகளைச் சிறப்பாக செய்துள்ளேன். பொதுமக்களிடையே அதிகபட்ச விழிப்புணர்வை ஏற்படுத்த என்னளவில் சிறப்பாகவே முயன்றேன். இது மக்களுக்குச் சேவை செய்வதற்கான நேரம்.
என் மனைவி மங்கையர்கரசி வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். அவரும் என்னைப் போலவே சிறப்பாகப் பணி செய்கிறார். எனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது உட்பட குடும்பத் தலைவனாக எனக்கும் சில பொறுப்புகள் இருக்கின்றன. என்னுடன் இருக்கும் குழந்தைகளை என் மனைவி பார்த்தே இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அவர்களைப் பார்க்க மனைவி விரும்பினார். அதனால் கடந்த 20-ம் தேதியன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் அனுமதிபெற்று, வாலாஜாபேட்டையிலுள்ள எனது வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்றிருந்தேன். என் மனைவியும் அங்கு வந்தார். அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட பிறகு நாங்கள் அங்கிருந்து அவரவர் பணியிடத்துக்குத் திரும்பினோம்.
இந்நிலையில், எனது மனைவிக்கு கரோனோ வைரஸ் தொற்று இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே, நான் எனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தேன். எனது குழந்தைகள் மற்றும் என்னுடன் வாலாஜாபேட்டைக்கு வந்தவர்கள் அனைவருடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றோம். சோதனைக்கு உட்பட்டோம். நானும் என் குழந்தைகளும் எங்கள் வீட்டிலேயே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டோம். இப்போது நாங்கள் நிலையான மற்றும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம். எனக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என சிலர் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல.
இந்த நேரத்தில், உங்கள் ஒவ்வொருவரையும் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். தயவுசெய்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். நீங்கள் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே வரும்போது உங்களைத் தூர விலக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் முகமூடியை அணிந்து கொள்ளுங்கள். கரோனோ வைரஸுக்கு எதிராகப் போராட அரசாங்கத்தின் அனைத்து அறிவுறுத்தல்களையும் கடைப்பிடியுங்கள். தயவுசெய்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். எனது நிலைமையை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு கரோனோ வைரஸுக்கு எதிராகப் போராட அரசுக்கு ஒத்துழையுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் வற்புறுத்துங்கள்.
நானும் என் மனைவியும் அரசு அதிகாரிகள் என்பதால் எங்களது பணி நிமித்தம் நாங்கள் ஆபத்தைச் சந்திக்கத்தான் வேண்டும். ஆனால், கரோனோ வைரஸால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். கரோனோ வைரஸ் நம் நாட்டில் பரவத் தொடங்கிய நாள் முதல் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல இடங்களுக்குச் சென்றேன். முடிந்தவரைக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். இப்போது என் மனைவி கரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டிக்கிறார். ஆனால், அதற்காக பயம்கொள்ளாமல் கரோனோ வைரஸ் நம் நாட்டிலிருந்து வெளியேறும் கடைசி நாள் வரை நாங்கள் பணியாற்றுவோம்.
அன்புள்ள நண்பர்களே... காவல்துறைக்கு ஒத்துழையுங்கள்; உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
- என்றும் அன்புடன் உங்கள் கார்த்திகேயன்.’
இப்படி டிஎஸ்பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT