Published : 23 Apr 2020 08:11 PM
Last Updated : 23 Apr 2020 08:11 PM
சிஎஸ்ஆர் நிதியையும் தொகுதி மேம்பாட்டு நிதியையும் அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப்.23) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் தமது லாபத்தில் இரண்டு விழுக்காட்டை அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி இருக்கும் கிராமப் பகுதிகளின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது அரசு வகுத்துள்ள விதி.
சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி என அழைக்கப்படும் இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துத் தந்துள்ளது. கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கரோனா பாதிப்பு நேர்ந்துள்ள நிலையில் தொழில் நிறுவனங்கள் யாவும் சிஎஸ்ஆர் நிதியை பிரதமர் ஆரம்பித்துள்ள 'பி.எம்.கேர்ஸ்' என்ற கணக்கில் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு அதை செலுத்தினால் வரி விலக்கு அளிக்கப்படாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நிதியை பி.எம்.கேர்ஸ் நிதியில் செலுத்தி வருகின்றன.
இதனால் அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றி இருக்கும் கிராமப் பகுதிகளின் மேம்பாடு தடைபட்டுள்ளது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இவ்வாறு பெறப்பட்ட நிதியை அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு (2020-2022) நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசு, அதை மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துள்ளது. அவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து எடுக்கப்பட்ட நிதியையும் அவர்கள் சார்ந்துள்ள மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்த இரண்டு வகையான நிதியையும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு மாநில அரசுகளிடம் ஒப்படைப்பதுதான் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உகந்ததாக இருக்கும்.
தமிழகத்துக்குச் சேர வேண்டிய சிஎஸ்ஆர் நிதி சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். அதுபோலவே நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி சுமார் 600 கோடி ரூபாய் உள்ளது. இந்த நிதியையெல்லாம் தமிழக அரசிடம் கொடுத்தால் அவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் சிறப்பாக செய்ய முடியும்.
மே மாதத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மாநில அரசுகளுக்குச் சேர வேண்டிய இத்தகைய நிதியை உரிய முறையில் அவற்றிடம் ஒப்படைப்பதே சரியானது.
சிஎஸ்ஆர் நிதியையும், தொகுதி மேம்பாட்டு நிதியையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் கேட்டிருப்பது போல தமிழக அரசும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்" என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT