Published : 23 Apr 2020 08:09 PM
Last Updated : 23 Apr 2020 08:09 PM
தொழிலதிபர்களைத் தொடர்ந்து விவசாயிகளுடனும் முதல்வர் பேசி குறைகளைக் கேட்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று (வியாழன்) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கரோனா பாதிப்பில் இந்தியாவில் 2-வது இடத்திலிருந்த தமிழகம் 5-வது இடத்திற்கு வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் துணிவைத் தருகின்றன. இதற்காக உயிரைப் பணயம் வைத்து மகத்தான சேவை ஆற்றி வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை வாழ்த்துகிறோம்.
மேலும், விவசாயப் விளைபொருட்களை முடிந்த அளவு விற்பனை செய்திடவும், அத்தியாவசியப் பொருட்கள் நகரம் தொட்டு கிராமங்கள் வரை சென்றடைவதற்கும் வேளாண்மைத் துறை எடுத்துள்ள முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளன. அதே நேரம் காய், கனி, தேங்காய் வகை உற்பத்தியில் 80 சதவீதம் வரை, விற்பனை செய்ய முடியாமல் தன் கண் முன்னே அழிந்துவருவதை பார்த்து விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மத்திய அரசு விவசாயிகளைப் பாதுகாக்க எந்தவொரு சிறப்புத் திட்டத்தையோ, நிதியையோ ஒதுக்காமல் ஏமாற்றி வருகிறது. கடன் தள்ளுபடி மற்றும் பாதிப்பிற்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் வஞ்சித்து வருவது வேதனையளிக்கிறது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. மும்முனை மின்சாரம் தினமும் 4 மணி முதம் 6 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கோடை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்ற முடியாததால் கிராமங்களில் மிகப் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சர்க்கரை ஆலைகள் திறக்கப்படாததால் கரும்பு முதிர்ந்த நிலையில் வெட்ட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னையில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் நிலைமை இவ்வாறு இருக்க, தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் முழுமையாக ஆதரவளித்து வருகிறார்கள். மருத்துவப் பணியாளர்கள், தொழிலதிபர்கள், உள்ளிட்ட பலரிடம் முதல்வர் காணொலிக் காட்சி மூலம் நேரிடையாக கருத்துக் கேட்டு வருவதை பாராட்டுகிறோம்.
அந்த வகையில், உணவை உற்பத்தி செய்ய அரும்பாடுபட்டு வரும் விவசாயிகளின் கருத்தையும் கேட்பதற்கு முதல்வர் முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT