Published : 23 Apr 2020 02:56 PM
Last Updated : 23 Apr 2020 02:56 PM
கரோனா நிவாரணத்துக்காக திரைத்துறையில் இருந்து முதலாவதாக புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அதற்கு முதல்வர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நான்கு பிராந்தியங்கள் கொண்ட பகுதி. புதுச்சேரி, காரைக்கால் தமிழகத்தையொட்டியும், கேரளத்தையொட்டி மாஹேயும், ஆந்திரத்தையொட்டி ஏனாமும் உள்ளன.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் ஏராளமான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடப்பது வழக்கம். மிகப்பெரிய பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்படுகின்றன. அவற்றுக்குக் குறைந்த அளவே கட்டணத்தை அரசு வசூலிக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்கள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன.
சிறிய மாநிலமான புதுச்சேரியானது மத்திய அரசிடம் கரோனா நிவாரண நிதியாக ரூ.995 கோடி கோரியது. ஆனால், இதுவரை ஏதும் கிடைக்கவில்லை. முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் தங்கள் உதவிகளை செய்து வருகிறார்கள்.
ஆனால், திரைப்படத்துறையினர் சிறிய மாநிலமான புதுச்சேரியை கண்டுக்கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக பலரும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வந்தனர். பல முக்கிய நடிகர்கள், திரைத்துறையினர் மத்திய, தமிழக அரசுகளுக்கு உதவினர். ஆனால், புதுச்சேரிக்கு ஏதும் நிதி வழங்கவில்லை.
இச்சூழலில் முதலாவதாக நடிகர் விஜய் ரூ.5 லட்சத்தை புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதை புதுச்சேரியில் பலரும் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "கரோனாவை கட்டுப்படுத்த சாதனங்கள் வாங்க நிதி தேவைப்பட்டதால் உதவ கோரினேன். பலரும் தாமாக முன்வந்து உதவுகின்றனர். புதுச்சேரியில் நிறைய திரைப்பட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலர் வருகிறார்கள். அவர்களுக்கும் புதுச்சேரிக்கு உதவ கடமை, பொறுப்பு உண்டு.
நடிகர் விஜய் ரூ.5 லட்சம் உதவுவதற்கு நன்றி. தாராள மனதை வரவேற்கிறேன். நன்றி. அதேபோல் இதர நடிகர்களும், திரைத்துறையினரும் உதவும் வகையில் தாராளமாக முன்வந்து நிதி தர வேண்டும்" என்று கோரினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT