Published : 23 Apr 2020 01:40 PM
Last Updated : 23 Apr 2020 01:40 PM
தமிழ்நாட்டில் தான் அதிகளவில் கரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றனர் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் இன்று (ஏப்.23) முதல்வர் பழனிசாமி மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர், முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும்போது துரதிருஷ்டவசமாக ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால் சிகிச்சை செலவுகளையும் அரசே ஏற்கும். சிகிச்சை பெறும் காலம் பணிக்காலமாக கருதப்படும். அதற்கும் ஊதியம் வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பிறகு அவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இத்தொற்றால் மருத்துவ பணியாளர்கள் துரதிருஷ்டவசமாக இறக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். மேலும், அவர்களின் குடும்பத்தில் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தோம்.
இரவு, பகல் பாராமல் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அரசின் சார்பாக நன்றி. கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களின் உடல்கள் தக்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் முறையாக வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனை பணியாளர்களுக்கும் அரசு தகுந்த உதவிகளை செய்யும்.
மருத்துவ பணி என்பது மகத்தான பணி, உயிரைக் காக்கும் பணி. இந்த பணியில் ஈடுபடுவோருக்கு அரசு உறுதுணையாக இருக்கும். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், குடும்பத்தையும் பார்க்காமல் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அவர்களுக்கு அரசு சார்பாக நற்சான்றுகள் வழங்கப்படும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காக்க வேண்டும். தமிழ்நாட்டில் தான் அதிகளவில் கரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கின்றனர். அத்தனை பேரும் மருத்துவர்களை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT