Published : 23 Apr 2020 01:14 PM
Last Updated : 23 Apr 2020 01:14 PM

வீல் சேரில் இருந்தாலும் புத்தகங்கள்தான் கைகொடுக்கின்றன; புத்தகங்களை வாசியுங்கள்: மாற்றுத்திறனாளி படைப்பாளி வேண்டுகோள்

'வீட்டிலிருந்தபடியே வேலை’ என்பது தங்களுக்கு சலிப்புத் தட்டிவிட்டதாக பலரும் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால், 15 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்துகொண்டிருக்கும் தனக்கு அந்த அலுப்பும் சலிப்பும் இல்லை என்கிறார் நாவல் காந்தி எனும் படைப்பாளி.

குமரி மாவட்டம், நாவல்காடு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காந்தி, இரண்டு கவிதைத் தொகுப்புகளுக்கு சொந்தக்காரர். எழுத்தாளரான இவர் வீட்டிலிருந்தபடியே கணினியில் தட்டச்சு செய்து கொடுக்கும் பணியைச் செய்துவருகிறார். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குழந்தைக்கே உரிய உடல்தன்மை கொண்டிருக்கும் காந்திக்கு கணினியில் டைப் செய்துகொடுப்பதுகூட மிகச் சவாலானதுதான்.

ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளாக தன் வீடே உலகமென நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்துவரும் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நிலையைப் பற்றியும் இப்போதேனும் வெகுமக்கள் சிந்திக்கட்டும் என இறைஞ்சுகிறது காந்தியின் குரல்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நாவல் காந்தி, “எங்க ஊரு கிராமங்கறதால குளம், ஆறுன்னு நிறைய நீர்நிலைகள் உண்டு. சின்ன வயசில் மணிக்கணக்கில் நீச்சலடிச்சுட்டு இருப்பேன். சைக்கிளை எடுத்துட்டு ரவுண்ட்ஸ் கிளம்புனா இருட்டுனாத்தான் வீட்டுக்கே வருவேன். ஆனா, இதெல்லாம் திடீர்ன்னு ஒருநாள் இல்லாம போச்சுன்னா? அதுதான் எனக்கு நடந்துச்சு.

எட்டாம் கிளாஸ் படிக்கும்போது நடக்குறப்போ என்னோட கால் பெருவிரல் தட்டி நானே அடிக்கடி கீழேவிழ ஆரம்பிச்சேன். நாட்கள் போகப்போக என்னால நீச்சலடிக்க முடியல. பஸ் படிக்கட்டில் ஏறமுடியல. ஸ்கூல் முடிஞ்சதும் பெஞ்ச்ல இருந்துகூட உடனே எழுந்திருக்க முடியல. டாக்டர்கள் பரிசோதிச்சுப் பார்த்துட்டு தசைச்சிதைவு நோய்னு சொல்லிட்டாங்க.

21 வயசு ஆகும்போது நான் படுத்தபடுக்கையா ஆகிருவேன்னும் சொன்னாங்க. ஆனா, என்னோட தன்னம்பிக்கையால அந்த நிலையை என்னை நெருங்கவிடாம வைச்சுருக்கேன். போராடி பி.காம்., வரை ரெகுலர் காலேஜில் படிச்சேன். உடம்பு ஒத்துழைக்காததால எம்.காம்., தொலைதூரக் கல்வியில் படிச்சேன். வெளியில வேலைக்குப் போறதுக்கு உடம்பு ஒத்துழைக்காது. அதான் வீட்டிலேயே இருந்து இந்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். இந்த சுத்துவட்டாரத்துல ஸ்கூல் கொஸ்டின் பேப்பர் வடிவமைப்பது, ஸ்டூடண்ட்ஸோட புராஜெக்ட் வேலைகளை பாத்துட்டு இருக்கேன்.

ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்தே சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான பதிவுகளைப் போட்டுட்டு இருக்காங்க. அதையெல்லாம் பார்த்தா சிரிப்புத்தான் வருது. நான் 15 வருசமாவே வீட்டுக்குள்ள ஜன்னல் வழியாத்தான் உலகத்தையே பார்க்கிறேன். நான் பார்க்கக்கூடிய மரமும், வானமும்கூட ஜன்னல்கம்பி இடைவெளியின் ஊடாகத்தான்.

எப்போதுமே வீட்டிலேயே இருப்பதால் அதிக நேரம் புத்தகங்கள் வாசிப்பேன். ஆனா, கரோனாவுக்காக வீட்டில் இருப்பவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தால், ‘நான் புத்தகம் வாசிக்கிறேன்’ என்று சொன்னவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சிலர்பேர், ”இப்போதான் வீல்சேரில் இருக்கும் உங்களோட வலியும் வேதனையும் தெரியுது”ன்னு சொல்லுறாங்க. ஆனா, எனக்கு அந்த வலியே இல்லை. அதுக்குக் காரணம், வாசிப்பு தான். இந்த ஊரடங்கு சமயத்திலாவது புத்தகங்களை வாசிங்கன்னு நண்பர்களுக்கு போன் போட்டு சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x