

எந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற உலகத்தை உருவாக்கி விட்டு தான் நாம் பழைய நிலைக்கு செல்ல முடியும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.23) தன் முகநூல் பக்கத்தில், "கரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத கொடிய அரக்கன் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்து வருகிறான். அவனை ஒழித்து, உலகையும், உலக மக்களையும் காப்பதற்காகத் தான் உலக நாடுகளும், அவற்றுடன் இணைந்து உலக சுகாதார நிறுவனமும் பாடுபட்டு வருகின்றன.
நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான முதன்மைக் கடமை சமூக இடைவெளியை பராமரிப்பது ஆகும். அதற்காகத் தான் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகளும் இதே கருத்தை தான் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒரு மாத ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், மக்களிடையே ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் மக்கள் வீடுகளை விட்டு, வீதிகளுக்கு வந்து நடமாடத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. ஊரடங்கு ஆணையை நீக்க வேண்டும்; தங்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று அந்த நாடுகளில் உள்ள மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டங்களை அரசுகள் ஒடுக்கி வருகின்றன.
இந்த புதிய சூழலை உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை செயலாளர் டெட்ராஸ் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். அதேநேரத்தில் இது சரியல்ல என்பதையும் விளக்கியுள்ளார். இனி அவரது வார்த்தைகள்...
"கரோனா ஒழிப்பில் நாம் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய அபாயங்களில் ஒன்று கரோனா பரவலைத் தடுக்க போதுமானவற்றை நாம் செய்து விட்டோம் என்ற தவறான மனநிறைவு காரணமாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அலட்சிய உணர்வு தான்.
ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நாடுகளில், பல வாரங்களாக வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் மக்களிடையே ஒருவிதமான விரக்தி ஏற்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தங்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் போது, மக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புவர்.
உலக சுகாதார நிறுவனமும் அதையே விரும்புகிறது. ஆனால், நினைத்தது போன்று நாம் பழைய நிலைக்குச் சென்று விட முடியாது. ஆரோக்கியமான, பாதுகாப்பான, எந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு ஏற்ற உலகத்தை உருவாக்கி விட்டு தான் நாம் பழைய நிலைக்கு செல்ல முடியும். அதற்கு அரசும், மக்களும் நிறைய செய்ய வேண்டும்" என்று டெட்ராஸ் கூறியுள்ளார்.
கரோனா பரவல் தொடங்கிய காலத்தில் அனைத்து நாட்டு மக்களும் ஊரடங்கி இருந்திருந்தால் கரோனா இந்த அளவுக்கு பரவியிருக்காது. மாறாக, ஊரடங்க மறுத்த மக்கள் சுதந்திரமாக நடமாடவும், வணிகம் செய்து பொருளீட்டவும் தான் விரும்பினர். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு இந்தப் போக்கு தான் காரணமாகும்.
இந்த நிலைமையை மாற்றி, அறிவுப்பூர்வமான அணுகுமுறையை கடைபிடித்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. அதற்கான புதிய மந்திரத்தையும் அதன் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
"கரோனா பாதித்த ஒவ்வொருவரையும் கண்டறிய வேண்டும்; தனிமைப்படுத்த வேண்டும்; சோதனை செய்ய வேண்டும்; அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்; அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும். இப்பணியில் மக்களை பங்கேற்கச் செய்து, கற்பித்து, அதிகாரமளிக்க வேண்டும். மக்களுக்கு அதிகாரமளிக்காமல், அவர்களின் பங்களிப்பின்றி கரோனா வைரஸுக்கு எதிரான இந்த போர் பயனளிப்பதாக இருக்காது’’ என்பது தான் உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநரின் வழிகாட்டுதல் ஆகும்.
எனவே, இனியும் மக்கள் அலட்சியம் காட்டாமல் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் மதித்து நடப்போம்; கரோனாவை விரட்டியடிப்போம்" என பதிவிட்டுள்ளார்.