Published : 23 Apr 2020 10:59 AM
Last Updated : 23 Apr 2020 10:59 AM
திருநெல்வேலியில் வவ்வால்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதன் உருவப்படங்கள் அச்சிட்ட முககவசங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராயச்சி மன்றத்தின் ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஊர்ப்புறங்களில் வசிக்கும் வவ்வால்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதிகளில் மக்கள் வவ்வால்களை கண்டு அச்சமடைந்து அவைகளை விரட்டினர்.
ஆனால் தமிழகத்திலுள்ள வவ்வால்களின் இருந்து சேகரிக்கப்பட்ட வைரஸால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நமது பகுதிகளில் வசிக்கும் வவ்வால்களில் கண்டறியப்படவில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் மக்கள் தங்கள் பகுதிகளில் வாழும் வவ்வால்களை கண்டு அச்சப்பட தேவையில்லை என்பதை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் இயங்கிவரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், முன்னீர்பள்ளம் முத்தமிழ் பள்ளி மற்றும் நெல்லை இயற்கைச் சங்கம் ஆகியவை இணைந்து திருநெல்வேலியில் குறுக்குத்துறை, சி.என். கிராமம் மற்றும் மேலவீரராகவபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வவ்வால் படம் அச்சிடப்பட்ட 1000 முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் முகக்கவசங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
நமது பகுதிகளில் பழந்திண்ணி மற்றும் பூச்சித் திண்ணி வவ்வால்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. இந்த வவ்வால்கள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை மற்றும் விதைப்பரவலுக்கு முக்கியப் பங்காற்றுகிறது.
இலுப்பை, நாவல், அத்தி போன்ற மரங்கள் இவ்வவ்வால்களால் விதைக்கப்பட்டவையே. மேலும் பூச்சித்திண்ணி வவ்வால்கள் நமது விளைநிலங்களில் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு விவசாயத்திற்கு பெரும் சேவையாற்றுகிறது,
மேலும் மனிதக்குடியிருப்புகளில் திரியும் கொசுக்களையும் தின்று மனிதனுக்கு நல்லபல சேவைகளை ஆற்றுகிறது.
எனவே இந்த வவ்வால்களை பாதுகாத்தால் மட்டுமே நாம் நலமாக வாழமுடியும். பொதுமக்கள் வவ்வால்களை கண்டு அச்சமடைய வேண்டாம் என்று அகத்தியமலை மக்கள்சாசர் இயற்கைவள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. மதிவாணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT