Published : 23 Apr 2020 10:11 AM
Last Updated : 23 Apr 2020 10:11 AM
மக்களுக்காக அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டுமென, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.22) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசு சார்ந்த துறையின் மூலம் அன்றாடம் பணிகளில் ஈடுபட்டு வருபவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையின் மூலம் நோய் பரவலைத் தடுக்கவும், நோய் தாக்கியவர்களை குணப்படுத்தவும், காவல்துறையின் மூலம் ஊரடங்கை அமல்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும், உள்ளாட்சித்துறையின் மூலம் துப்புரவு பணிகளை செய்யவும், தண்ணீர் தரவும், ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்களை வழங்கவும் உள்ளிட்ட பல்வேறு அவசியப் பணிகளை மேற்கொள்பவர்கள் அனைவரும் உயிரைப் பணயம் வைத்து பணி செய்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு நோய் தொற்று வருமா வராதா என்று தெரியாத நிலையில், மக்களுக்காக சேவை செய்வது மனிதாபிமானம் மிக்கது. இந்த ஊரடங்கு காலத்தில், மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படும் இவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னவென்றால், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சாலைப்போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், துப்புறவு பணியாளர்கள், குடிநீர் விநியோகிப்பவர்கள், ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிப்பவர்கள் என ஒவ்வொருவரின் அவசர, அவசியத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, அவர்கள் பணிக்கு வந்து செல்வதில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனையும் கேட்டு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். காரணம், மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை போன்ற துறை மூலம் இப்போது பணியில் ஈடுபடுபவர்களில் சிலர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் போவதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படாமல் சிரமங்களுக்கு உட்படுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
இப்போதைய அவசரக்கால, அவசியப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் மனம் நிம்மதியாக பணி செய்தால் தான் அவர்களும் விருப்பத்தோடு பணிக்கு வந்து ஆர்வத்தோடு பணி செய்வார்கள், பொதுமக்களும் பயன் பெறுவார்கள்.
எனவே, கரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்காக அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்காக அந்த துறை சார்ந்த குழு ஒன்று அமைத்து அதன் மூலம் பணியில் உள்ளவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT