மீன்பிடித் தடையால் ராமேசுவரம் கடலில் ஆழமற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்.
மீன்பிடித் தடையால் ராமேசுவரம் கடலில் ஆழமற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்.

கரோனாவால் வாழ்வாதாரம் பாதித்துள்ள 1.75 லட்சம் மீனவர்களுக்கு நிவாரணம்- தடைக்கால நிதி உதவியை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை

Published on

எஸ். முஹம்மது ராஃபி

தமிழக கடற்பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தைக் கருத்தில்கொண்டும், மீன் வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை 2 மாதங்களுக்கு விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் ஆகிய தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி கிடையாது.

கரோனா தொற்று பரவு வதைத் தடுக்க தமிழக விசைப்படகு களுக்கு மார்ச் 20 முதல் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதி டோக்கன் வழங்கவில்லை.

இந்த ஆண்டு விசைப்படகு மீனவர்கள் தொடர்ச்சியாக 3 மாதங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தடைக்காலத் தை குறைக்கவும், மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் ரூ. 5,000 நிவாரணத் தொகையை விரைவில் வழங்கவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது,

தமிழகத்தில் 1, 75,620 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் சுமார் ரூ. 88 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 4.5 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிட ஏதுவாக மொத்தம் ரூ.232 கோடி நிதி வழங்குமாறு தமிழக மீன்வளத்துறை சார்பாக மத்திய அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைக்காலத்தை ஊரடங்கு தொடங்கிய நாளான மார்ச் 24 முதல் மே 23 வரை 61 நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மே 24 முதல் விசைப்படகு மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது, என்று கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in