Published : 22 Apr 2020 09:10 PM
Last Updated : 22 Apr 2020 09:10 PM
முதல்வரின் உத்தரவுப்படி, ஊரடங்கின்போது, மதுரை உட்பட தென்மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் 28 வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார். இதைத் தொடர்ந்து அவர் இன்று மதுரை கீழமாசி வீதியிலுள்ள மொத்த பலசரக்கு கடைகள், கச்சாத்து பலசரக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கடைகளை ஆய்வு செய்தார்.
வர்த்தகர்களிடம் அவர் கூறியபோது, ‘‘ஊரடங்கில் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க வேண்டும். இந்த நேரத்தில் விலையேற்றமின்றி சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். உங்களுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்யும்,’’ என, உறுதி அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசும்போது, ''மதுரையில் அத்தியாவசியத் தேவைக்கென கடைகள் காலை 6 முதல் 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. கடைகளில் விலைப் பட்டியல், இருப்பு விவரம் கணக்கிடப்படுகிறது. ஏப்.9 முதல் 16-ம் தேதி வரையிலும் 458 டன் பருப்பு, 261 டன் வாசனை திரவியங்கள், 269 டன் அரிசி, 159 டன் எண்ணெய் வித்து, 269 டன் மாவுப் பொருட்கள், 269 டன் சர்க்கரை மற்றும் இதர உணவுப் பொருள்கள் என, 2 ஆயிரம் டன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி 232 டன்கள், 2-0ம் தேதி 404 டன் அத்தியாவசியப் பொருட் கள் மதுரை கீழமாசி வீதிக்கு வரப்பெற்றுள்ளன. மக்களைச் சென்றடையும் வகையில் மருந்துப் பொருட்கள், அரிசி ,பருப்பு, எண்ணெய், சீனி உற்பத்தி என 3,225 நிறுவனங்களுக்கு வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பரவை மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இருந்து தினமும் 600 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. மதுரையில் 41 இடங்களில் தற்காலிக காய்கறிச் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள், முகவர்கள் வாழைத்தார்கள் உள்ளிட்ட விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கும், வாங்கி விற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT