Published : 22 Apr 2020 08:10 PM
Last Updated : 22 Apr 2020 08:10 PM

தாயாருக்கு மருத்துவ உதவி கோரிய ராணுவ வீரர்: உடனடியாக களமிறங்கிய தமிழக முதல்வர்; இணையத்தில் குவியும் பாராட்டு

ராணுவ வீரரின் வேண்டுகோளை ஏற்று, அவருடைய தாயாருக்கு மருந்துகள் அனுப்பி நலம் விசாரித்து ட்வீட் செய்துள்ளார் தமிழக முதல்வர். இதற்கு ட்விட்டர் தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் தடையின்றிக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், இந்த ஊரடங்கால் பொருளாதாரம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு அரசியல் கட்சிகள், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் எனப் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் உதவிகளும் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் இன்று (ஏப்ரல் 22) காலை தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ரவிக்குமார் என்பவர், "ஐயா நான் மத்தியப் பாதுகாப்புப் படையில் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயாருக்கு 89 வயது. வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனக்குத் தந்தையும் இல்லை. சகோதரனும் இல்லை. எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை" என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வ,ர் "தாய்நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்கள் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன். கண்டிப்பாக தம்பி. கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து ரவிக்குமாரின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி, அவரின் தாயாரை நலம் விசாரித்து அதன் புகைப்படத்துடன் தமிழக முதல்வர் ட்வீட் செய்துள்ளார். ரவிக்குமாரின் ட்வீட்டைக் குறிப்பிட்டு, "தங்கள் தாயாருக்குத் தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தப் பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 22, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x