Published : 22 Apr 2020 07:10 PM
Last Updated : 22 Apr 2020 07:10 PM

மதியம் உணவு; மாலையில் கபசுரக் குடிநீர்: எளியவர்களைத் தேடிச்சென்று உதவும் பறக்கை கிராம இளைஞர்கள்

கரோனா ஊரடங்கால் பிழைப்புக்கும் அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி நிற்கும் மக்களைத் தேடிச் சென்று உதவி வருகிறார்கள் நாகர்கோவில் அருகிலுள்ள பறக்கை கிராமத்து இளைஞர்கள்.

பறக்கை யாதவர் தெரு இளைஞர்கள், சேவா பாரதி அமைப்புடன் இணைந்து தங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவின்றித் தவிக்கும் 150க்கும் அதிகமானோருக்கு வீடு தேடிச் சென்று தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இதற்காக இருபதுக்கும் அதிகமான இளைஞர்கள் காலையிலேயே காய்கறிகள் வெட்டுவதில் தொடங்கி சமையல் பணிகளில் ஈடுபடத் தொடங்குகின்றனர். மதியம் சமைத்த உணவுகளை அவர்களே எளிய மக்களின் வீடுகளுக்குக் கொண்டு போய் கொடுக்கிறார்கள். இவர்களின் இந்தச் சேவைக்கு வயது வித்தியாசம் இன்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரும் உதவி செய்கின்றனர்.

“ஆரம்பத்தில் 50 பேருக்கு சாப்பாடு வழங்கும் இலக்கோடு தொடங்கிய இந்தப் பயணம் இப்போது தினமும் 150க்கும் அதிகமான நபர்களுக்கு சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சில நண்பர்கள் சேர்ந்து தொடங்கிய இந்த முயற்சிக்கு போகப் போக எங்கள் ஊரைச்சேர்ந்த பலரும் தன்னார்வலராக உதவி ஊக்கம் கொடுத்தனர். எங்கள் ஊரில் இருந்து வெளியூர், வெளிநாடுகளில் இருப்போரும் முகநூலில் இந்தச் சேவையைப் பார்த்துவிட்டு நிதி உதவி செய்தார்கள். நாங்கள் வெறும் கருவிதான். இதன் பின்னால் பலரின் சேவை இருக்கிறது” என்கிறார்கள் ஏழைகளுக்கு அமுதூட்டும் பறக்கை இளைஞர்கள்.

தாங்களே உணவைச் சமைத்து மதியம் அதை விநியோகித்து முடிக்கும் இந்த இளைஞர்கள், மாலையில் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப் புறப்பட்டுவிடுகிறார்கள். ஊடரங்கு காலத்தை காவல் துறையின் ட்ரோனுக்கு பயந்து ஓடியும், வெறுமனே பொழுதை போக்கியும் கழிக்கும் இளைஞர்கள், ஏழைகளின் பசி போக்கும் இந்தப் பிள்ளைகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x