Last Updated : 22 Apr, 2020 06:01 PM

1  

Published : 22 Apr 2020 06:01 PM
Last Updated : 22 Apr 2020 06:01 PM

டாக்டர் சைமன் மறைந்த நாளை மருத்துவர் சேவை நாளாக அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வேண்டுகோள்

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை

கரோனா நோய் தாக்கி இறந்த டாக்டர் சைமன் நினைவாக, அவர் இறந்த நாளை மருத்துவர் சேவை நாளாக அறிவிக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை அமைந்தகரையில் வசித்தவர் பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். இவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய, முதலில் கீழ்ப்பாக்கம் கல்லறை பகுதிக்குக் கொண்டு சென்றனர். அப்போது, அங்கு 90க்கும் மேற்பட்டவர்கள், அவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வேலங்காடு கல்லறைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸாரின் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை வேலங்காடு கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தியதாக 21 பேரை அண்ணா நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் கல்லறை யில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 90 பேர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலைய போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா நோய் தாக்கி இறந்த டாக்டர் சைமன் நினைவாக, அவர் இறந்த நாளை மருத்துவர் சேவை நாளாக அறிவிக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக நாட்டைக் காப்போம் மதுரை மன்றத்தின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் சி.ஜே.ராஜன், செல்வகோமதி, தமிழரசன் ஆகியோர் இன்று கூறுகையில், ''கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த டாக்டர் சைமனின் தியாகம் போற்றுதலுக்குரியது. மருத்துவ சேவைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது உடலை நல்லடக்கம் செய்யச் சென்றவர்கள் மீது வன்கொடுமை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டாக்டர் சைமனின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சைமன் மறைந்த நாளை மருத்துவர் சேவை நாளாக அரசு அறிவிக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x