Published : 22 Apr 2020 05:54 PM
Last Updated : 22 Apr 2020 05:54 PM
ஓசூர் நகரில் ஊரடங்கு சமயத்தில் சட்டவிரோதமாகத் திறந்து வைத்து விற்பனையில் ஈடுபட்ட அத்தியாவசியப் பொருட்களற்ற 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு மற்றும் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நகரப்பகுதியில் மருந்து, காய்கறி, மளிகைக் கடை, இறைச்சிக் கடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ஓசூர் - ரயில் நிலைய சாலையில் கிளைச்சிறை முன்புள்ள ஒரு ஹார்டுவேர் கடை, ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள திரையரங்கு அருகிலுள்ள ஒரு தேநீர்க் கடை, ஓசூர் உள்வட்ட சாலையில் உள்ள இனிப்புக் கடை உட்பட 5 கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து நகரப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மூலமாக தகவல் அறிந்த ஓசூர் கோட்டாட்சியர் குமரேசன் திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பின்பு அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பெறாத 5 கடைகளையும் பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி சட்டவிரோதமாகத் திறக்கப்பட்டிருந்த 5 கடைகளும் போலீஸார் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இப்பணியின்போது டிஎஸ்பி சங்கு, வட்டாட்சியர் வெங்கடேசன், ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் வட்சுமணதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து ஒசூர் கோட்டாட்சியர் குமரேசன் கூறுகையில், ''ஓசூர் நகரில் ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கடைகளை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களற்ற கடைகளைத் திறக்க அனுமதியில்லை. நகரப்பகுதியில் ஊரடங்கு மற்றும் 144 தடைச் சட்டத்தை மீறி சட்டவிரோதமாக திறக்கப்பட்டிருந்த 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியில் வரும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT