Last Updated : 22 Apr, 2020 04:28 PM

 

Published : 22 Apr 2020 04:28 PM
Last Updated : 22 Apr 2020 04:28 PM

சிறப்பு சரக்கு ரயில் சேவை மூலம் 10 நாட்களில் 105 டன் காய்கறிகள், முகக்கவசம், மருந்துகள் விநியோகம்; கோவை, திருப்பூர், ஈரோட்டில் முன்பதிவு செய்யலாம்

சிறப்பு சரக்கு ரயில் சேவை மூலம் 10 நாட்களில் 105 டன் காய்கறிகள், முகக்கவசம், மருந்துகள் விநியோகம்.

கோவை

சிறப்பு சரக்கு ரயில் சேவை மூலம் கடந்த 10 நாட்களில் 105 டன் காய்கறிகள், பழங்கள், முகக்கவசம், மருந்துகள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

"சென்னையில் இருந்து கோவை வழியாக சொர்ணூருக்கு இரண்டு பெட்டிகளுடன் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில், சென்னையில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு சொர்ணூர் வந்தடையும். மறுமார்க்கமாக, அதிகாலை 3.30 மணிக்கு சொர்ணூரில் இருந்து புறப்படும் ரயில், மாலை 4.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது. செல்லும் வழியில் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் பார்சல்களை ஏற்றி, இறக்கிக்கொள்ளலாம்.

டெல்லி, ஹௌரா, மும்பை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள், சென்னையில் இருந்து பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த சரக்கு ரயில் சேவை மூலம் மட்டும் கடந்த 9-ம் தேதி முதல் சேலம் கோட்டத்தில் இருந்து 104.85 டன் காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில், கோவையில் இருந்து அதிக அளவிலான காய்கறிகளும், மருந்துகளும், திருப்பூரில் இருந்து முகக்கவசமும் அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு பார்சல் அனுப்ப விரும்புவோர், கோவை 90039 56955, திருப்பூர் 96009 56238, ஈரோடு 96009 56231, சேலம் 90039 56957 என்ற எண்களில் பார்சல் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்".

இவ்வாறு ஹரிகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x