Published : 22 Apr 2020 03:33 PM
Last Updated : 22 Apr 2020 03:33 PM
அரியலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் யாரும் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் சென்று வந்த நிலையில், கரோனா தொற்று இல்லாத ஒருவரின் மருந்தகத்தில் பணிபுரிந்த பெண்கள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த இரு தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
ஏற்கெனவே, டெல்லி சென்று வந்தவர்களின் வீடுகளுக்கு அருகே வசிப்பவர்கள், அவர்களது கடைகளில் பணியாற்றுபவர்கள், உறவினர்கள் என்ற அடிப்படையில், ரத்த பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட 2 பெண்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இதில், ராயம்புரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் வீட்டின் அருகே வசிக்கும் 12 வயது சிறுவன், அந்த தெருவில் வசிக்கும் 36 வயது கூலித்தொழிலாளி ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று (ஏப்.22) உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ராயம்புரம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், கிராமத்தில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்துறை சார்பில் காய்கறிகள் வழங்கவும், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், ராயம்புரம் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும், அனைவரது ரத்த மாதிரிகள் சேகரிப்பதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கிராமத்தின் அனைத்துத்தெருக்களும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் த.ரத்னா இப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏற்கெனவே, செந்துறை பகுதியில் 2 பேர் கரோனா தொற்று உள்ள நிலையில், தற்போது 2 பேருக்கு தொற்று உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT