Published : 22 Apr 2020 03:18 PM
Last Updated : 22 Apr 2020 03:18 PM

கரோனா நோயாளிகளின் பெயர் விவரங்களை வெளியிடக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடக் கோரிய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி ஆறில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பல ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஆயிரக்கணக்கண்க்கான பேர் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் உள்ள 7 கோடி பேரில், சென்னையில் மட்டும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்திய அரசின் நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒரு சிலருக்கு பாதிப்புகள் இருந்தால் மற்றொருவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் சார்ந்துள்ள பகுதியை அரசு இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்காணிக்கவும், , பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பதைத் தடுக்கவும் முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வில் காணொலி மூலமாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் படி ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. பாதிக்கப்பபட்டவர்களின் பெயரை வெளியிட்டால் சமூகப் பிரச்சினை ஏற்படும். மேலும் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது” எனச் சுட்டிக்காட்டினர்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x