Published : 22 Apr 2020 03:12 PM
Last Updated : 22 Apr 2020 03:12 PM
மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.22) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்திய செய்தி கரோனாவை விடக் கொடூரமானது.
மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது?
இது மக்களைக் காக்கும் அரசா?
அரசியல் செய்யத் தினமும் பேட்டி கொடுத்தால் போதுமா? - பொய்களைச் சொன்னால் போதுமா?
தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையையும் வாசித்தால் போதுமா?
சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது!
சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை!
தமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT