Published : 22 Apr 2020 01:46 PM
Last Updated : 22 Apr 2020 01:46 PM
கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் (வயது 55). இரு வாரங்களுக்கு முன்பு, அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு இடுகாட்டுக்குக் கொண்டு சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர், கரோனா தொற்றுக்குப் பயந்து மருத்துவர் உடலை அங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி, அங்கிருந்தவர்களை கல், கட்டையால் தாக்கியுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதையடுத்து, மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென, பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், அரசு பாதுகாப்பு அளிக்கும் எனவும், முதல்வர் பழனிசாமி உறுதி அளித்திருந்தார்.
இந்த சூழலில், தனது கணவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை தங்கள் சமூகக் கல்லறையில் புதைக்க உதவும்படி முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவர் சைமனின் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஏப்.22) உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவிக்கு தொலைபேசி மூலம் முதல்வர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், "சுமார் 12:30 மணியளவில் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி சைமனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று சுமார் 12:30 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் திரு.சைமன் அவர்களின் துணைவியார் திருமதி.ஆனந்தி சைமன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 22, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT