Published : 22 Apr 2020 12:59 PM
Last Updated : 22 Apr 2020 12:59 PM
புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு நாளை சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா பரிசோதனை நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஏப்.22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுவையில் 1,319 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 1,272 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மற்றவர்களுக்கு விரைவில் பரிசோதனை முடிவுகள் வரும். புதுவையில் 3 பேர் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு நாளையும், மற்ற 2 பேருக்கு வெள்ளிக்கிழமையும் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு சுகாதாரத்துறை பரிசோதனை நடத்தியுள்ளது. புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 78 வென்டிலேட்டர்கள் இருப்பில் உள்ளன. இதில் 27 வென்டிலேட்டர்கள் கரோனா தொற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஜிப்மரில் 128 வென்டிலேட்டர்களில் 30 வென்டிலேட்டர்கள் கரோனா தொற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுவை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் சட்டப்பேரவை வளாகத்தில் கரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை இந்தப் பரிசோதனை நடத்தப்படும். விரும்புபவர்கள் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ளலாம்.
புதுவைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் தேவையான அளவு வந்துள்ளது. இன்று முதல் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் மறு உத்தரவு வரும் வரை ரேபிட் டெஸ்ட் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசின் உத்தரவுக்காக ரேபிட் டெஸ்ட் எடுக்கப்படவில்லை.
புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாமில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அதிக அளவில் வருகின்றனர். இதனால் மாநில எல்லைகளில் மருத்துவ நிபுணர்கள் குழு முகாம் அமைக்கப்படும். வெளிமாநில நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே புதுவைக்குள் அனுமதிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு எதற்காக பரிசோதனை என்று சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் சென்று காய்கறி வழங்குதல், அரிசி வழங்குதல், குறைகளைக் கண்டறிதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். அதனால் நாளை பிசிஆர் டெஸ்ட் நாளை காலை 9 முதல் 11 வரை எடுக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT