Published : 22 Apr 2020 12:39 PM
Last Updated : 22 Apr 2020 12:39 PM

வணிகப் பயன்பாட்டுக்கு மின்சாரம் பயன்படுத்துவோர் மின் கட்டணம் செலுத்த புதிய முறை: மின்சார வாரியம் அறிவிப்பு

வணிகப் பயன்பாட்டுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் எப்படி மின் கட்டணம் செலுத்தலாம் என்பது குறித்து மின்சார வாரியம் வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தாழ்வழுத்த (LT/LTCT) தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்களின் கவனத்திற்கு’

கோவிட்-19 பரவுதலால் மார்ச் 24 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மார்ச் 2020 மற்றும் ஏப்ரல் 2020 ஆகிய மாதங்களில் 22.03.2020 முதல் 30.04.2020 வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் அதற்கு முந்தைய மாதக் கணக்கீட்டுப் பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாதக் கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும் (அதாவது ஜனவரி 2020/ பிப்ரவரி 2020/மார்ச் 2020 ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையையே மார்ச் 2020/ ஏப்ரல் 2020 மின்கட்டணமாக செலுத்தலாம்) எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவிட்-19 பரவுதலால் மார்ச் 24 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த (LT/LTCT) தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தமிழக முதல்வரிடம் வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் கதவடைப்பு மற்றும் மின் உபயோகமின்மை காரணத்தால் முந்தைய மாத மின் கட்டணத்தையே செலுத்துவதென்பது தற்போதைய மின்நுகர்வின் அடிப்படையில் எழும் கட்டணத்தை விட அதிகமாக உள்ளது என முறையிட்டனர்.

முதல்வர் இந்த முறையீட்டினைப் பரிசீலித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கியதின்பேரில், மின்துறை அமைச்சர், தாழ்வழுத்த (LT/LTCT) தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்களின் மின்கட்டணத்தை கீழ்க்கண்ட முறையில் திருத்தியமைக்க உத்தரவிட்டுள்ளார்.

1) தாழ்வழுத்த (LT/LTCT) தொழிற்சாலை மற்றும் வணிக மின்நுகர்வோர்கள் தங்களது மின்னிணைப்பு மின் அளவியிலுள்ள மின் அளவீட்டினை குறுஞ்செய்தி/ வாட்ஸ் அப்/ மின்னஞ்சல் மூலமாக எழுத்து அல்லது புகைப்பட வடிவில் (Kwhr/kvahr/MD,, அவரவர் இணைப்பிற்கு ஏற்றவாறு) தங்களது மின் இணைப்பு சார்ந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளர்/ இளநிலை பொறியாளருக்குத் தெரிவிக்கலாம்.

சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளர்/ இளநிலை பொறியாளரின் அலுவலக கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

2) மேற்கண்ட மின் அளவீடு பெறப்பட்டவுடன் மின்கட்டணத்தினை திருத்தியமைத்து அதன் விவரங்களை பிரிவு அலுவலர்கள் நுகர்வோருக்கு மேற்கண்ட தகவல் பெறப்பட்ட முறையிலேயே (குறுஞ்செய்தி/ வாட்ஸ் அப்/ மின்னஞ்சல்) கணக்கீட்டு கட்டண விவரங்களை தெரிவிக்க வழிவகை செய்வர்.

3) மேலும், தாழ்வழுத்த (LT/LTCT) பயனீட்டாளர்களுக்கு கட்டணம் செலுத்த ஏற்கெனவே வழங்கியுள்ள இணையதள வழிகளான வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் ((BBPS) முதலியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின்பயனீட்டாளர்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

4) மேற்கண்ட கணக்கீடு முறைகள் தாழ்வழுத்த வீடு மற்றும் பிற மின்நுகர்வோர்களுக்குப் பொருந்தாது. மேலும், இது மே 3 வரை மட்டுமே பொருந்தும்".

இவ்வாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x