Published : 22 Apr 2020 10:24 AM
Last Updated : 22 Apr 2020 10:24 AM

ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் முழு அடைப்பு அவசியம்; வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் முழு அடைப்பு அவசியம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.22) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனாவின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரமான சென்னைக்கு உட்பட்ட 14 மண்டலங்களில் சுமார் 13 மண்டலங்களில் படிப்படியாக கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அதிலும், வர்த்தகம் மற்றும் மக்கள்தொகை அதிகமுள்ள ராயபுரம் பகுதியிலும், அரசின் முக்கிய அலுவலகங்கள் இருக்கின்ற தேனாம்பேட்டைப் பகுதியிலும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. தலைநகரமான சென்னையில் கரோனாவின் பாதிப்பு அதிகமாவதைக் அதிக அளவில் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால் கண்டிப்பாக அரசின் உத்தரவு ஒன்று இப்போதைக்குத் தேவைப்படுகிறது.

காரணம் தலைநகரமான சென்னையில் கரோனா பரவலின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தால் தான் பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அதாவது, சென்னையில் நோயின் தாக்கம் குறையும் போது மற்ற மாவட்ட மக்களும் நோய் தாக்கம் குறையும் என்ற எண்ணத்துக்கு வருவார்கள்.

எனவே, சென்னைக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிறு அன்றும் மற்றும் மே 3 ஆம் தேதி ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்களில், மருத்துவமனைகள், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட வேண்டும். பொதுமக்கள் எவரும் அவசர, அவசியத் தேவையை தவிர கண்டிப்பாக வெளியே வரக்கூடாது.

இதற்கு உண்டான அறிவிப்பை வெளியிடும் போதே கண்டிப்பான நடவடிக்கைகள் குறித்தும் வெளியிட வேண்டும்.

நோயைக் கட்டுப்படுத்த இந்த 2 நாள் ஊரடங்கு இப்போதைக்கு மிக மிக அவசியம் என்பதை மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் இணைந்து ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னையில் 14 மண்டலங்களிலும் முழு அடைப்பு என்ற அறிவிப்பை வெளியிட பரிசீலனை செய்ய வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x